உடற்கூறு ஆய்வு செய்வதில் தாமதம்: உறவினர்கள் சாலைமறியல்
விருதுநகர் அருகே எரிச்சநத்தம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (40). இவர் அந்த கிராமத்தில் பெட்டி கடை நடத்தி வருகிறார். இந்நிலையில் இன்று வழக்கம்போல் அதிகாலையில் தனது பெட்டி கடையை திறந்து வைத்து விட்டு சாலையைக் கடந்து எதிரே உள்ள தேநீர் கடைக்கு தேநீர் அருந்த சென்றுள்ளார். அப்பொழுது சாலையைக் கடந்து செல்லும் பொழுது ராஜபாளையத்தில் இருந்து விருதுநகர் நோக்கி வந்த லாரி அவர்மீது ஏறி விபத்து ஏற்பட்ட நிலையில் சம்பவ இடத்திலேயே வெங்கடேஸ்வரன் உயிரிழந்தார்.
இந்த விபத்து குறித்து எம். புதுப்பட்டி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .இந்த நிலையில் வெங்கடேஷனின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக ஆம்புலன்ஸ் மூலம் விருதுநகர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் காவல் துறையினரின் அலட்சியத்தால் மாலை வரை உடற்கூறு ஆய்வு செய்ய வில்லை என்று கூறி தாமதமதம் ஏற்பட்டதால் அவரது உறவினர்கள் விருதுநகர் - காரியாபட்டி சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
மறியலில் ஈடுபட்டவர்களிடம் கிழக்கு காவல்நிலைய காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு உடனடியாக உடற்கூறு செய்து தங்களிடம் ஒப்படைக்கப்படும் என்று உறுதியளித்ததன் பேரில் சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.