தாமதமாக இயக்கப்பட்ட பெங்களூர் எக்ஸ்பிரஸ்- பயணிகள் அவதி
பெங்களூவில் இருந்து குமரி மாவட்டம் நாகர்கோவிலுக்கு தினமும் இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை 6 .45 மணிக்கு ஆரல்வாய்மொழி ரயில் நிலையம் வந்தடைந்தது. அதன் பிறகு அந்த ரயில் புறப்படவில்லை. ஏழரை மணிக்கு ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கடந்து சென்றது. அதன் பிறகு பெங்களூர் எக்ஸ்பிரஸ் ரயில் பயணிகளுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. இதற்கிடையே இரண்டாவது பிளாட்பார்மில் சென்னையில் இருந்து திருவனந்தபுரம் செல்லும் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் வந்தது. அப்போதும் பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயில் புறப்படாமல் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் முதலில் சென்றது. இதனால் பயணிகள் மிகவும் அவதி அடைந்து ரயில் நிலைய அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் ரயில் நிலைய அதிகாரிகள் கண்டு கொள்ளவில்லை.
இதனை அடுத்து பெங்களூரு எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்த பயணிகள் சிலர் அவசரங்கருதி அனந்தபுரி எக்ஸ்பிரஸ் ரயில் ஏறி நாகர்கோவில் சென்றனர். பிறகு சுமார் ஒன்றரை மணி நேரத்துக்கு பிறகு காலை 8. 15 மணிக்கு நாகர்கோவில் ரயில் நிலையத்துக்கு சென்றது. இதனால் பயணிகள் கடும் அவதிக்கு உள்ளாகினார்கள். இது குறித்து ரயில்வே அதிகாரிகள் கூறுகையில், - நெல்லை- ஆரல்வாய்மொழி இரட்டை இரயில் பாதை பணிகள் முடிவடைந்து, தற்போது ரயில்வே சிக்னல் மாற்றி அமைக்கப்படும் பணிகள் நடந்து வருகின்றது. மேலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாகத்தான் ரயில் நிறுத்தபட்டது என கூறினர்.