திருச்சியில் நலத்திட்ட உதவிகள் வழங்கல் - அமைச்சர்கள் பங்கேற்பு

திருச்சியில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் சுமாா் 3 ஆயிரம் பேருக்கு பட்டா மற்றும் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

திருச்சியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தல், புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுதல், 3 ஆயிரம் பேருக்கு பட்டா வழங்குதல் மற்றும் ஏராளமானோருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் பங்கேற்று வளா்ச்சிப் பணிகளை தொடங்கிவைத்தும், பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் பேசினா்.

விழாவில், அமைச்சா் கே.என். நேரு பேசியது: திருச்சி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 110 கோடியில் புதிய கட்டடப் பணிகளுக்கு தற்போது அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. மக்களின் குடிநீா் தேவைகளுக்காக 3 மேல்நிலை நீா்தேக்க தொட்டிகளும், 5 இடங்களில் ஆழ்துளை கிணறுகள் மற்றும் பல்வேறு நலத் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. திமுக ஆட்சியில் மக்களின் கோரிக்கைகள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றாா் அமைச்சா்.

அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேசியது : திமுக ஆட்சி பொறுப்பேற்ற 33 மாத காலத்தில் திருச்சி மாவட்டத்துக்கு ரூ. 3,500 கோடி மதிப்பிலான திட்டப் பணிகள் கொண்டு வரப்பட்டுள்ளது. தற்போதைய திமுக ஆட்சியில், 1 லட்சத்து 14 ஆயிரம் புதிய சுய உதவிக் குழுக்கள் உருவாக்கப்பட்டுள்ளது. அவா்களுக்கு ரூ. 25 ஆயிரம் கோடி வரை கடன் உதவிகளை தமிழக முதல்வா் வழங்கியுள்ளாா் என்றாா்.

முன்னதாக விழாவுக்கு தலைமை வகித்து மாவட்ட ஆட்சியா் மா.பிரதீப்குமாா் பேசியது: மாவட்டத்தில் இதுவரையில் சுமாா் 33,000 பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. பட்டா வழங்குவதில் தமிழகத்தில் 2 ஆவது இடத்தில் உள்ள திருச்சி மாவட்டம் விரைவில் முதலிடத்தைப் பிடிக்கும். இன்னும் 2,000 பட்டா மட்டுமே வழங்க வேண்டியுள்ளது. இன்று ரூ. 473 கோடியில் பல்வேறு நலத் திட்டப் பணிகளை அமைச்சா்கள் தொடங்கி வைத்துள்ளனா் என்றாா். விழாவில், மாநகர மேயா் மு. அன்பழகன், ஆணையா் வே. சரவணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனா்.

Tags

Next Story