அபாயத்தின் விளிம்பில் டெல்டா - அண்ணாமலை

அபாயத்தின் விளிம்பில் டெல்டா -  அண்ணாமலை

 நடைபயணத்தின் போது அண்ணாமலை...

டெல்டா அபாயகரமான பிரச்சனைக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது என பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை கூறினார்.
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி சட்டசபை தொகுதியில் என் மண் என் மக்கள் நடைபயணத்தின் போது, பா.ஜ., மாநிலத் தலைவர் அண்ணாமலை பேசியதாவது;

பிரதமர் மோடி மீது மக்களுக்கு உள்ள நம்பிக்கையால் தான் நடைபயணத்தில் கூட்டம் சேர்ந்து வருகிறது. மத்திய அரசின் திட்டங்கள் கடைக்கோடி மக்களுக்கு வந்து சேர்ந்துள்ளதை கண்கூடாக பார்த்து வருகிறீர்கள். நமது நாட்டின் பொருளாரத்தில் வளர்ச்சி, உள்நாட்டு பாதுகாப்பு என ஒன்பது ஆண்டு காலத்தில் எந்த அளவுக்கு வளர்ச்சியடைந்துள்ளதை என்பதை நீங்கள் பார்த்து வருகிறீர்கள். பேராவூரணியை சேர்ந்த இளைஞர்கள் பலர் சிங்கப்பூர், துபாய் போன்ற நாடுகளில் உள்ளனர். அவர்கள் பாதயாத்திரைக்கு வந்துள்ளனர். அவர்கள் சொல்லுவது வெளிநாடுகளில் இந்தியன் என்ற சொன்னால் பெருமையாக உள்ளது என்கிறார்கள். பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு தான் இந்தியா என்றால் மரியாதையுடன் பார்க்கின்றனர் என்கிறார்கள்.

நாட்டின் வளர்ச்சி, இந்தியாவின் முகம் எந்த அளவுக்கு மாறி இருக்கிறது என்பதை தெரிந்துக்கொண்டுள்ளோம். கேளராவில் எந்த அளவுக்கு தென்னை மரங்கள் இருக்கிறதோ அந்தளவுக்கு போராவூரணியில் உள்ளது. 2018ம் ஆண்டு கஜா புயலால் பொருளாதார பாதிப்பை சந்தித்து இருப்பீர்கள். சிங்கப்பூர் முன்னாள் பிரதமர் லீ குவான் யூவின் நேர்மை, தைரியம், தன்னம்பிக்கை இலக்கணமாக திகழ்ந்தார். அங்குள்ள இளைஞர்கள் இது போன்று இந்தியாவில் யாரும் வருவார்கள் என நினைத்தார்கள். அதே நேர்மை, தைரியம், தன்னம்பிக்கையோடு லீ குவானை தாண்டி பிரதமர் மோடி இந்தியாவுக்கு கிடைத்துள்ளார்.

கடந்த பத்து ஆண்டுகளாக இந்தியாவில் நேர்மையான ஆட்சி கிடைத்து இருக்கிறது. காங்கிரஸ் கடைசியாக ஆட்சியில் இருந்த கொப்பரைத் தேங்காயின் ஆதார விலை கிலோ ஒன்றுக்கு ரூ.52.50; தற்போது ஒன்பது ஆண்டுகளில் 108.60 ரூபாயாக உயர்ந்துள்ளது. தமிழகம், கேளரா, கர்நாடகாவில் தான் தேங்காய் உற்பத்தி அதிகமாக உள்ளது. 107 சதவீதம் கொப்பரை தேங்காயின் ஆதார விலையை பிரதமர் மோடி உயர்த்தியுள்ளார். சமீபத்தில் தேங்காய் விலை எட்டு ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட போது விவசாயிகள் போராட்டம் நடத்தினார்கள்.

தற்போது தமிழகத்தில் மத்திய அரசு கொள்முதலை அதிகரித்தால் தேங்காய் ரூ.14க்கு விற்பனையாகிறது.

நெல் ஆதார விலை, யூரியா விலை என டெ்லடா விவசாயிகளுக்கு பிரதமர் மோடி துணையாக இருக்கிறார். இதனால் தான் டெல்டாவில் பிறக்காத டெல்டாக்காரர் ஒருவர் இருக்கிறார் என்றால், அது பிரதமர் மோடி தான் என விவசாயிகள் கூறுகிறார்கள். டெல்டாவில் இளைஞர் விவசாயத்திற்கு வர வேண்டும். விவசாயம் அல்லாத பல தொழில்களில் இளைஞர்கள் உள்ளனர். எனவே, அவர்களுக்காக டெல்டாவில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலை கொண்டு வரப்படும். ஆனால் டி.ஆர்.பாலுவிடம் தொழிற்சாலை என்றால் நமது சாராய ஆலை தொழிற்சாலை இருக்கிறது என்பார்.

பாராளுமன்றத்தில் இந்த தொகுதி எம்.பி., பழனிமாணிக்கம் இதுவரை மூன்று கேள்விகள் தான் கேட்டுள்ளார். மோடியை எப்படி எல்லாம் திட்டலாம் என பாராளுமன்றத்திற்கு தி.மு.க.,வினர் வந்தனர். தேர்தல் அறிக்கையில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றி விட்டதாக முதல்வர் ஸ்டாலின் கூறும் பொய்யை ஏற்றுக்கொள்ள மக்கள் தயாராக இல்லை. சோழ பேரரசு காலத்தில் கட்டப்பட்ட கல்லணை 2 ஆயிரம் ஆண்டாக நிற்கிறது. தி.மு.க.,வினர் போட்ட ரோடு ஒரு மழைக்கு தாங்காமல் போகிவிடுகிறது. கமிஷன், கமிஷன்,கமிஷன் என்பதற்காக மட்டுமே ஒரு ஆட்சி நடந்துக்கொண்டு இருக்கிறது.

மகன், மருமகன் நன்றாக இருக்க வேண்டும் என்பதற்காக ஆட்சி நடந்துக்கொண்டு இருக்கிறது. விவசாயிகளுக்கு என தனியாக வாக்குறுதி. ஆனால் இன்றைக்கு விவசாயிகள் மீது குண்டாஸ், கடைமடைக்கு தண்ணீர் இல்லை, தரிசு நிலமாக மாறி வருகிறது. விவசாயம் கொஞ்சம் கொஞ்சமாக தோற்று வருகிறது என முதல்வரிடம் கூறினால், நான் கான்கீரீட் போட்டு நடந்த போது நன்றாக இருந்தது என்பார். டெல்டா அபாயகரமான பிரச்சனைக்குள் நுழைய ஆரம்பித்து விட்டது. மோசமான பிரச்சனையை டெல்டா வரலாற்றில் முதன்முதலாக பார்க்கிறது. இதற்கு தீர்வு காண பா.ஜ.,வால் தான் முடியும்.

Tags

Next Story