சம்பா, தாளடி நெற்பயிருக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் :

சம்பா, தாளடி நெற்பயிருக்கு 24 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் :
பம்பு செட்
ஆற்றில் பாசனத்துக்கு தண்ணீர் இல்லாத நிலையில், பம்புசெட் மூலம் விவசாயிகள் நெற்பயிர் நடவு செய்துள்ளதால், சம்பா, தாளடி நெற்பயிருக்கு 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை மாவட்ட அளவிலான விவசாயிகள் குறைதீ்ர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் தெ.தியாகராஜன் தலைமை வகித்தார். கூட்டத்தில் வேளாண்மை இணை இயக்குநர் (பொறுப்பு) எஸ்.ஈஸ்வர், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் நா.உமாமகேஸ்வரி உள்ளிட்ட அரசு அலுவலர்கள், விவசாயிகள் பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: தனியார் உரக்கடைகளில் தடைசெய்யப்பட்ட உரங்கள் விற்பனை செய்வதை கண்டறிந்து தடுக்க வேண்டும். சம்பா பருவத்தில் நெல் நடவில் குருத்துப் பூச்சி தாக்குதல் அதிகமாக உள்ளது. இதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். பேராவூரணி பகுதியில் உள்ள 23 குளங்கள், ஏரிகளில் ஆக்கிரமிப்புகள் அதிகமாக இருப்பதால் அதை அகற்றி, தற்போது பெய்யும் மழைநீரை சேகரித்து, சாகுபடிக்கு ஏற்றவாறு நீரை சேமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லணைக் கால்வாய் ஆற்றில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளை தொய்வில்லாமல், மேற்கொள்ள வேண்டும். இதற்கான நிதியை அரசிடமிருந்து பெற முயற்சிகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும். மாவட்டம் முழுவதும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் திருப்பி செலுத்திய விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்க வேண்டும். செங்கிப்பட்டி பகுதியில் போதிய மழையும் இல்லை, அங்கு பாசனத்துக்கு நிகழாண்டு தண்ணீரும் இல்லை. இதனால் அங்கு விவசாயிகள் விவசாயம் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். எனவே செங்கிப்பட்டி பகுதியை வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதியாக அறிவித்து, பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு உரிய இழப்படை வழங்க வேண்டும். சம்பா, தாளடிக்கு ஆற்றில் தண்ணீர் இல்லாத நிலையில், பம்பு செட் மூலம் நெற்பயிர் நடவு செய்யப்பட்டுள்ளதால், பயிரை காப்பாற்ற 24 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும். டெல்டா மாவட்டங்களில் அரசுக்கு நிகராக தனியாரும் நெல் கொள்முதலில் ஈடுபடுகின்றனர். தனியார் நெல் வெளி மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. அரசுகொள்முதல் செய்யும் நெல் பொதுவிநியோக திட்டத்துக்கு பயன்படுத்தப்படுகிறது. எதிர்கால உணவுத் தேவையை கருத்தில் கொண்டு ஏகபோக நெல் கொள்முதலை அரசே செய்ய வேண்டும். பொங்கல் சிறப்பு தொகுப்புக்கான விளை பொருட்களை முன்னுரிமையின் அடிப்படையில் தமிழக விவசாயிகளிடமே கொள்முதல் செய்ய வேண்டும். இடி, மின்னல் போன்ற இயற்கை இடர்பாடுகளால் உயிரிழக்கும் விவசாயிகளுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும். தமிழகத்தின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு நீர் ஆதாரமாக திகழும் கொள்ளிடம் ஆற்றில் மணல் அள்ள தடை விதிக்கப்பட்டு, கொள்ளிடம் ஆற்றை பாதுகாக்கப்பட்ட குடிநீர் மண்டலமாக அறிவிக்க வேண்டும்" என்பது உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி பேசினர்.
Next Story