வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றக் கோரிக்கை

பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு கூட்டம், வளர்ச்சிப் பணிகளை நிறைவேற்றித் தருமாறு உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ஊராட்சி ஒன்றியக்குழு சாதாரணக் கூட்டம், திங்கள்கிழமை ஆவணம் ஊராட்சி ஒன்றிய அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு, ஒன்றியக்குழு தலைவர் சசிகலா ரவிசங்கர் தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சாமிநாதன் (வ.ஊ), செல்வேந்திரன் (கி.ஊ) ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் அலிவலம் அ.மூர்த்தி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் ஆல்பர்ட் குணாநிதி, பெரியநாயகி, ராஜலெட்சுமி ராஜ்குமார், பாக்கியம் முத்துவேல், அண்ணாதுரை, சங்கவி, அமிர்தவள்ளி கோவிந்தராஜ், நவநீதம் ஆறுமுகம், ராஜப்பிரியா, சுந்தர் உள்ளிட்ட உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

உறுப்பினர் பெரியநாயகி பேசுகையில், "சாலை வசதி ஏற்படுத்தி தர வேண்டும். பழுதடைந்த குடிநீர்த் தொட்டியை மாற்றித் தர வேண்டும். சித்துக்காடு பகுதியில் உப்பு தண்ணீராக உள்ளது. எனவே புதிய ஆழ்துளைக் கிணறு அமைத்து தர வேண்டும். மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து சாலை அமைத்து தர வேண்டும். களத்தூர் ஊரணிக்கரையில் வசிக்கும் மக்களுக்கு சிமெண்ட் சாலை அமைத்து தர வேண்டும். சித்துக்காடு - அம்மையாண்டி சாலையை அமைத்து தருவதாக உறுதி அளித்துள்ள பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் நா.அசோக்குமாருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்" என்றார்.

இதே போல் உறுப்பினர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். இதற்கு பதில் அளித்து தலைவர் சசிகலா ரவிசங்கர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பேசுகையில், "உறுப்பினர்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிதி நிலைமைக்கு ஏற்ப ஒவ்வொன்றாக நிறைவேற்றி தரப்படும்" என உறுதி அளித்தனர். கூட்டத்தில் பொது செலவினங்களுக்கு ஒப்புதல் பெறப்பட்டது. அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். நிறைவாக, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் மனோகரன் நன்றி கூறினார்.

Tags

Next Story