திருமயத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் நின்று செல்ல கோரிக்கை
கோப்பு படம்
திருமயம் புதுக்கோட்டை காரைக்குடி ரயில்வே வழித்தடத்தில் திருமயம் ரயில் நிலையம் அமைந்துள்ளது. இதன் வழியாக தினமும் 15க்கு மேற்பட்ட ரயில்கள் இயக்கப்படுகின்றன. தாலுகா தலைமையிடமான திருமயத்தில் வரலாற்று சிறப்புமிக்க சிவன் பெருமாள் குடைவரைக் கோயில்கள், மலைக்கோட்டை ஆகியவை உள்ளன.
இவற்றைக் காண தினமும் 500க்கும் அதிகமானோர் வருகின்றனர். இதனால் திருமயத்தை மரபுரிமை பண்பாட்டு நகராக அரசு அறிவித்து சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மூலம் பணிகளை செய்து வருகிறது.
ஆனால் திருமயம் ரயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரயில்கள் எதுவும் நிறுத்தப்படுவதில்லை பயணிகள் ரயில்கள் மட்டுமே நின்று செல்கின்றன. இதனால் திருமயத்துக்கு வரும் சுற்றுலா பயணிகள் காரைக்குடி அல்லது புதுக்கோட்டைக்கு ரயிலில் வந்த அங்கிருந்து பஸ்ஸில் பயணிக்கும் நிலை உள்ளது. இதனால் காலவிரயத்துடன் கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க ராமேஸ்வரம் சென்னை எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம் கோவை எக்ஸ்பிரஸ் ஆகிய இரண்டு ரயில்களை மட்டும் ஆவது திருமயத்தில் நின்று செல்ல ரயில்வே நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் சார்பில் திருமயம் ஒன்றிய பாஜக தலைவர் முருகேசன் தெற்கு ரயில்வே பொது மேலாளருக்கு மனு அனுப்பி உள்ளார்.