திருக்கோவிலூர் சிறுவர் பூங்காக்களை சீரமைத்து தர கோரிக்கை

திருக்கோவிலூர் சிறுவர் பூங்காக்களை சீரமைத்து தர கோரிக்கை

சிறுவர் பூங்கா

திருக்கோவிலூர் நகரில் உள்ள சிறுவர் பூங்கா போதிய பராமரிப்பின்றி புதர்மண்டி காட்சி அளிக்கிறது. இதனை சீரமைக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் நகராட்சி பகுதிகளில் பொதுமக்களின் பொழுதுபோக்கிற்காக ஊஞ்சல், சீசா, கற்கள் பதிக்கப்பட்ட நடைபாதை, மின்விளக்கு வசதி, இருக்கைகள், சறுக்குகள், ஆகிய வசதிகளுடன் ஐந்து சிறுவர் பூங்காக்கள் உள்ளன. இந்த பூங்காவிற்கு தினமும் காலை மற்றும் மாலை நேரங்களில் பொதுமக்கள் தங்களது குழந்தைகளுடன் வந்து செல்வது வழக்கம். அங்குள்ள உபகரணங்களில் குழந்தைகள் விளையாடி மகிழ்வார்கள்.

மேலும் பெரியவர்கள் நடைபயிற்சி மேற்கொள்வது, அமைதியான சூழலில் குழந்தைகள் விளையாடுவதை கண்டு ரசிப்பது என பொழுதை கழிப்பார்கள். தற்போது இந்த சிறுவர் பூங்காக்கள் முறையாக பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படவில்லை. இதன் காரணமாக அங்குள்ள விளையாட்டு உபகரணங்கள் உடைந்து காணப்படுகின்றன. அது மட்டும் இன்றி பழுதடைந்த விளையாட்டு உபகரணங்களால் சிறுவர்களுக்கு விபத்துக்கள் ஏற்படும் அபாயமும் எழுந்துள்ளது. மேலும் பூங்காவில் செடிகள் ஆங்காங்கே அடர்ந்து வளர்ந்து புதர் போல் காணப்படுகின்றன. இதனால் பார்ப்பதற்கு பூங்கா குறுங்காடு போல் உள்ளது. இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது:- திருக்கோவிலூர் மக்களுக்கு பொழுதுபோக்குக்கான போதிய இடம் இல்லாததால், நகரின் மையப்பகுதியில் உள்ள இப்பூங்காலுக்கு கடந்த காலங்களில் பொதுமக்கள் தினசரி மாலை நேரங்கள் மற்றும் விடுமுறை நாட்களில் தங்கள் குழந்தைகளுடன் வந்து, விளையாடி பொழுதைக் கழித்தனர்.எங்கள் குழந்தைகளுக்கு சிறந்த பொழுதுபோக்கு இடமாக சிறுவர் பூங்காக்கள் விளங்கியது.

அங்கு குழந்தைகளுடன் மகிழ்ச்சியாக சென்று வந்தோம். தற்போது அந்த இடத்தை பார்க்கவே வருத்தமாக உள்ளது. காரணம், முறையான பராமரிப்பின்றி கேட்பாரற்று கிடக்கிறது. குழந்தைகள் விளையாடி மகிழ்ந்த உபகரணங்கள் உடைந்து கிடக்கின்றன. ஆங்காங்கே செடிகள் வளர்ந்து புதர்மண்டி காட்சியளிக்கிறது. அதில் விஷ ஜந்துகள் பதுங்கி இருந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை. சில ஆண்டுக்கு முன் திருக்கோவிலூர் பகுதியில் செயல்பட்டு வரும் நாடொப் பனசெய் அறக்கட்டளை எனும் தன்னார்வலர்கள் கொண்ட குழு மூலமாக என் ஜி ஜி ஓ நகர் மற்றும் சந்தப்பேட்டை ஆசிரியர் நகர் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள சிறுவர் பூங்காக்களை தங்களின் சொந்த செலவில் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டனர். இதில் சிமெண்ட் தரைதளம் அமைத்து நடைபாதை, மின்விளக்கு வசதி, இருக்கைகள், சறுக்குகள் போன்ற சிறுவர்கள் விளையாடு கூடிய உபகரணங்களை பல லட்ச ரூபாய் மதிப்பீட்டில் அமைத்துத் தந்தனர். ஆனால் அதை முறையாக பராமரிக்க வேண்டிய நகராட்சி நிர்வாகம் சிறுவர் பூங்காக்களை கண்டு கொள்ளாததால் தற்போது விளையாட்டு உபகரணங்கள் அனைத்தும் சேதமடைந்துள்ளன. இது தொடர்பாக பல புகார்கள் அதிகாரிகளுக்கு தெரிவித்தும் எந்த ஒரு பயனும் ஏற்படவில்லை.

விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை நாட்களில் அந்த பூங்காக்களுக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பூங்கா பராமரிப்பின்றி காணப்படுவதால் பூங்காவின் வாசலில் அமர்ந்து சிலர் மது அருந்துவதும், சிலர் பாட்டில்களை உடைத்து செல்வதும் வழக்கமாக உள்ளது. இதனால் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் மிகவும் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.எனவே, கோடை விடுமுறை தொடங்க உள்ளதால் பாழாகியுள்ள பூங்காவைச் சீரமைத்து புதிய பொலிவுக்கு நகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

Tags

Read MoreRead Less
Next Story