காஞ்சியில் 4 ஆண்டுகளாக வீணாகி வரும் கழிப்பறையை சீரமைக்க கோரிக்கை
காஞ்சிபுரம் மாநகராட்சி, தாயார்குளம், அண்ணா நகர் பகுதிவாசிகளுக்காக, கடந்த 2014 - 15ம் ஆண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 5 லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட பொது கழிப்பறை கட்டடம் 2017ல் திறக்கப்பட்டது.
அப்பகுதிவாசிகள் மட்டுமின்றி அருகில் உள்ள மயானத்திற்கு வருவோரும் இயற்கை உபாதை கழிக்க பொது கழிப் பறையை பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், நான்கு ஆண்டுகளுக்கு முன், கழிப்பறையின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ஆழ்துளை குழாயில் பொருத்தப்பட்டுள்ள நீர்மூழ்கி மின்மோட்டார் பழுதானது.
மின்மோட்டாரை சீரமைக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை. தண்ணீர் வசதி இல்லாததால், கழிப்பறையை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால், கழிப்பறை பயன்பாடின்றி வீணாகி வருகிறது.
எனவே, மின்மோட்டாரை சீரமைத்து, கழிப்பறையை புதுப்பித்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.