செய்யூரில் ஏரியை துார் வாரி சீரமைக்க கோரிக்கை

செய்யூரில் ஏரியை துார் வாரி சீரமைக்க கோரிக்கை
ஏரியை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டி கோரிக்கை
செய்யூரில் ஏரியை துார் வாரி சீரமைக்க கோரிக்கை வைத்துள்ளனர்.

செய்யூர் ஊராட்சிக்குட்பட்ட தேவராஜபுரம் கிராமத்தில், 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட பெரிய ஏரி உள்ளது. இந்த ஏரியின் வாயிலாக, 200 ஏக்கர் வயல்வெளி நீர்ப்பாசனம் பெறுகிறது. பொதுப்பணித்துறைக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரிக்கு,

வாழப்பட்டு ஏரி, மேற்கு செய்யூர் குடியிருப்புப் பகுதி மற்றும் வயல்வெளியில் இருந்து வெளியேறும் மழைநீர் வந்தடைகிறது. தேவராஜபுரம் ஏரியில் இருந்து மதகுகள் வாயிலாக, விவசாய நிலங்களுக்கு தண்ணீர் செல்கிறது.

இந்த ஏரி, 50 ஆண்டுகளாக துார் வாரி சீரமைக்கப்படாமல் உள்ளதால், ஏரியில் போதிய நீரை தேக்க முடியாத சூழல் உள்ளது. இதனால், விவசாயத்திற்கு போதிய தண்ணீர் இல்லாமல், விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். மூன்று போகம் பயிர் செய்து வந்த நிலையில், போதிய தண்ணீர் இல்லாமல், தற்போது ஒரு போகம் மட்டுமே பயிர் செய்து வருகின்றனர். ஏரியின் நீர்வரத்துக் கால்வாய், செடி, கொடிகள் வளர்ந்து துார்ந்துள்ளதால், ஏரிக்கு போதிய நீர்வரத்து இல்லை. மேலும், ஏரிக்கு சொந்தமான நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் தேவராஜபுரம் ஏரியை அளவீடு செய்து, ஆக்கிரமிப்புகளை அகற்றி, ஏரியை துார் வாரி சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Tags

Read MoreRead Less
Next Story