எடப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு காவிரி உபரிநீர் வழங்க கோரிக்கை

எடப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு காவிரி உபரிநீர் வழங்க கோரிக்கை

விவசாயிகள் மனு

எடப்பாடி ஒன்றிய கிராமங்களுக்கு காவிரி உபரிநீர் வழங்க தி.மு.க. தேர்தல் அறிக்கை குழுவினரிடம் விவசாயிகள் மனு கொடுத்தனர்.

நாடாளுமன்ற தேர்தலையொட்டி தி.மு.க. சார்பில் தேர்தல் அறிக்கை தயாரிக்க கனிமொழி எம்.பி. தலைமையில் 11 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவினர் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பொதுமக்களின் அத்தியாவசிய திட்டங்கள் குறித்து கருத்து கேட்டு கோரிக்கை மனுக்கள் பெற்றனர்.

இந்த நிலையில் எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் வக்கீல் வெங்கடாஜலபதி தலைமையில் விவசாயிகள் நேற்று தி.மு.க. தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழுவை சேர்ந்த சென்னை மேயர் பிரியா, டாக்டர் எழிலன், அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், ராஜன் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்து கோரிக்கை மனு கொடுத்தனர்.

அந்த மனுவில், கடந்த அ.தி.மு.க.ஆட்சி காலத்தில் ஏற்படுத்தப்பட்ட மேட்டூர் அணை காவிரி உபரிநீர் திட்டத்தின் மூலம் 100 ஏரிகளை நிரப்பும் பாசன திட்டம் செயல்படுத்தப்படுகிறது. எடப்பாடி ஒன்றியத்திற்குட்பட்ட பக்கநாடு, ஆடையூர் ஊராட்சி பகுதியில் உள்ள செங்குட்டப்பட்டி ஏரி, குண்டுமலை கரடுஏரி, ஆணைபள்ளம் ஏரி மற்றும் மதுர காளியம்மன் நீர்த்தேக்கம் உள்ளிட்ட உள்ளூர் நீர் நிலைகளுக்கும் விரிவுப்படுத்த வேண்டும்.

இதன் மூலம் இப்பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும். மேலும் விவசாயிகளின் வாழ்வாதாரம் உயரும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த கோரிக்கை குறித்து ஆவன செய்யப்படும் என்று குழுவினர் தெரிவித்தனர்.

Tags

Next Story