குமரி மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் தூர்வார கோரிக்கை

குமரி மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் தூர்வார கோரிக்கை
மனு அளிக்க வந்த விவசாயிகள் சங்கத்தினர்
குமரி மாவட்டத்தில் அனைத்து கால்வாய்களையும் தூர்வார வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

தமிழ்நாடு விவசாயிகள் சங்க கன்னியாகுமரி மாவட்ட செயலாளர் ரவி, துணைச்செயலாளர் விஜி உட்பட விவசாய சங்க பிரதிநிதிகள் நேற்று கன்னியாகுமரி மாவட்ட கலெக்டரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது:- கன்னியாகுமரி மாவட்டத்தில் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி மற்றும் சிற்றாறு - 1,சிற்றாறு - 2 அணைகள் வழியாக தண்ணீர் வழங்கி இரண்டு போக நெல் விவசாயம் நடைபெற்று வந்தது. சமீபகாலமாக விவசாயம் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. ஜூன் 1ஆம் தேதி அணைகள் திறக்க இருப்பதாக தெரிய வருகிறது.

அணைகள் அடைக்கப்பட்ட பின்பு மார்ச், ஏப்ரல் மாதங்களில் மாவட்டத்தில் உள்ள அனைத்து கால்வாய்கள் மற்றும் கிளை கால்வாய்களை தூர்வாரி மதகுகள் மராமத்து பணிகள் செய்து முடிக்கப்பட்டு இருக்க வேண்டிய நிலையில், இதுவரை எந்தவிதமான பணிகளும் மேற்கொள்ளவில்லை. இதனால் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் விவசாயத்திற்கு அமைக்கப்பட்ட கால்வாய்கள் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டு மாவட்டத்தில் உள்ள குளங்கள், கால்வாய்களை தூர்வாரி, உடைப்புகளை சரி செய்து கடை வரம்பு பகுதி வரை அணை நீர் கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story