சென்னை மாநகர போக்குவரத்து எல்லை காஞ்சி வரை நீட்டிக்க கோரிக்கை
சென்னை மாநகர போக்குவரத்து கழக எல்லையை காஞ்சிபுரம் வரை நீட்டிக்க வேண்டும் என, நுகர்வோர் பாதுகாப்பு மற்றும் விழிப்புணர்வு சங்க காஞ்சிபுரம் மாவட்ட செயலர் வழக்கறிஞர் பெர்ரி, தமிழக முதல்வருக்கும், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குனருக்கும் அனுப்பியுள்ள கோரிக்கை மனு விபரம்: காஞ்சிபுரத்தில் இருந்து, தினமும் ஆயிரக்கணக்கானோர் பல்வேறு காரணமாக சென்னையின் பல்வேறு பகுதிக்கு சென்று வருகின்றனர்.
அதேபோல, சென்னையில் இருந்தும் திரளானோர் காஞ்சிபுரம் வந்து செல்கின்றனர். காஞ்சிபுரத்தில் இருந்து சென்னையின் பல்வேறு பகுதிக்கு செல்ல நேரடி பேருந்து வசதி இல்லாததால், பூந்தமல்லி அல்லது தாம்பரம் சென்று, சென்னை மாநகர பேருந்து வாயிலாக பல்வேறு பகுதிக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால், நேரம் விரயமாவதுடன் கூடுதல் செலவும் ஏற்படுகிறது.
சமீபத்தில் சென்னை பெருநகர பரப்பளவை சி.எம்.டி.ஏ., 1,189 சதுர கி.மீ.,ல் இருந்து 5,904 சதுர கி.மீ.,வாக விரிவாக்கம் செய்து காஞ்சிபுரத்தை, சென்னை பெருநகர எல்லைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. ஆனால், சென்னை மாநகர போக்குவரத்துக் கழக எல்லையை காஞ்சிபுரம் வரை நீட்டிப்பு செய்யாமல், இன்னும் பழைய நிலையிலேயே அதாவது 50 கி.மீ., என்ற அளவிலேயே உள்ளது.