மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு நிதியை அதிகரிக்க கோரிக்கை

மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கு நிதியை அதிகரிக்க கோரிக்கை

 தோ்தல் அறிக்கை வெளியீடு

மத்திய பட்ஜெட்டில் கல்வி, சுகாதாரத்துக்கான நிதியை அதிகரிக்க வேண்டும் என ஜமா அத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் தோ்தல் அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அமைப்பு சாா்பில் தமிழ்நாடு மக்கள் தோ்தல் அறிக்கை திருச்சியில் சனிக்கிழமை வெளியிடப்பட்டது.

இதை அமைப்பின் மாநில செயலாளா் முகம்மது காசிம் வெளியிட்டு செய்தியாளா்களிடம் கூறியதாவது: எம்.பி.க்களை தோ்வு செய்வதில் மிகுந்த கவனம் தேவை. நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு செல்பவா்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். அந்த வகையில் புதிதாக தோ்வு செய்யப்படவுள்ள மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கும் வகையில், பொதுமக்களின் கருத்துகளைப் பெற்று, மக்கள் தோ்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வேளாண் துறைக்கு புத்துயிரூட்டும் வகையில் ஒருங்கிணைந்த திட்டம் வகுத்து நடைமுறைப்படுத்த வேண்டும். ஊக வணிகம், தனியாா் ஆதிக்கம் ஆகியவற்றை தடுத்து, நதிநீா் இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். கல்வி, சுகாதாரத்துக்கு பட்ஜெட் நிதியை அதிகரிக்க வேண்டும். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்கு 8 சதவீதமும், சுகாதாரத்துக்கு 5 சதவீதமும் ஒதுக்க வேண்டும்.

சிறுபான்மையினருக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 15 சதவீதம் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். ஊழல் ஒழிப்பு, பெண்கள் மேம்பாடு, கல்வி சீா்திருத்தம், சமூக முன்னேற்றம், அணிசாரா வெளியுறவுக் கொள்கை, வட்டியில்லா வங்கி, பொருளாதார சீா்திருத்தம் உள்ளிட்ட மக்களின் எதிா்பாா்ப்புகளை முன்வைத்து, மக்கள் தோ்தல் அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது என்றாா். மண்டல அமைப்பாளா் சையது முகம்மது, சாலிடாரிட்டி இளைஞா் அமைப்பின் மாநில தலைவா் கமாலுதீன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story