பட்டுக்கோட்டையை தனி மாவட்டமாக்க கோரிக்கை

பட்டுக்கோட்டையை  தனி மாவட்டமாக்க கோரிக்கை

தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், மாவட்டச் செயற்குழு கூட்டம்


தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள சம்பைபட்டினத்தில், தமிழக நலிவுற்ற விவசாயிகள் சங்கம், மாவட்டச் செயற்குழு கூட்டம், நடைபெற்றது. கூட்டத்திற்கு, தஞ்சாவூர் தெற்கு மாவட்டத் தலைவர் உமர் தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் முகமது வகி வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் கே.ஆர்.அன்பழகன், ஒன்றியப் பொருளாளர் முகைதீன் அப்துல் காதர், கிளைத் தலைவர் அகமது பஷீர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதில், சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.எஸ்.முகமது இப்ராஹிம் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். மாவட்டத் துணைத் தலைவர் ஜான் போஸ்கோ, மாவட்ட அமைப்பாளர் நாகராஜன், துணைத்தலைவர் ஜீவானந்தம், பாபநாசம் ஒன்றியச் செயலாளர் ஆனந்த், மற்றும் செல்வராஜ், மூக்கையா மற்றும் மாவட்ட, வட்டார, ஒன்றிய நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திருவையாறு நகரத் தலைவராக செல்வராஜ், பேராவூரணி ஒன்றிய தலைவராக திருப்பதி, சேதுபாவாசத்திரம் ஒன்றியத் தலைவராக அன்வர் அலி, மாவட்ட துணை தலைவராக மூக்கையன் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். கூட்டத்தில், " தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைக்கோடி பகுதியில் இருக்கும் பட்டுக்கோட்டை, பேராவூரணி ஒன்றியங்கள், திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட பகுதிகளை ஒருங்கிணைத்து, பட்டுகோட்டையை தலைமையகமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க வேண்டும். டிசம்பர் 24 ஆம் தேதி தஞ்சாவூரில் காவிரி பாதுகாப்பு மாநாடு நடத்துவது,

இதில் தமிழக விளையாட்டு துறை அமைச்சர், வேளாண்மை துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு அழைப்பு விடுத்து வெற்றிகரமாக நடத்துவது, பட்டுக்கோட்டை, பேராவூரணி வட்டத்தில் தென்னை சாகுபடி அதிகமாக உள்ளதால் தேங்காய் சார்ந்த தொழிற்சாலைகளை அமைக்க வேண்டும். தமிழக அரசு விவசாயிகளிடம் தேங்காயை நேரடியாக கொள்முதல் செய்து, ரேஷன் கடைகள் மூலம் தேங்காய் எண்ணையை வழங்க வேண்டும்.

பேராவூரணி வட்டாரத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகள், குளங்களில், வருவாய்த்துறை மற்றும் ஊராட்சி நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும். மறவன்வயல், மறவன் குளத்தில் உள்ள சிமெண்ட் சாலையை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். விளங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் அடகு வைத்த நகைகளை திருப்பி தராமல் மோசடி செய்யும் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளின் நகைகளை மீட்டு தர வேண்டும்.

ஏழை, எளிய சிறு, குறு விவசாயிகளுக்கு முறையாக பயிர் கடன் வழங்க வேண்டும். பேராவூரணி கடைவீதியில் நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவுபடுத்த வேண்டும். பேராவூரணி பகுதியில் பெண்கள் சுயதொழில் தொடங்க மாவட்ட நிர்வாகம் உடனடியாக சுயதொழில் கடன் வழங்க வேண்டும்" என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. நிறைவாக மன்சூர் கான் நன்றி கூறினார்.

Tags

Next Story