சிறார்கள் அதி திறன் இருசக்கர வாகனங்களை இயக்குவதை தடுக்க கோரிக்கை

சிறார்கள் அதி திறன்  இருசக்கர வாகனங்களை இயக்குவதை தடுக்க கோரிக்கை
வாகனம் ஓட்டும் சிறார்கள்
சிறார்கள் அதி திறன் இருசக்கர வாகனங்களை இயக்குவதை தடுக்க வேண்டும் என வலியுறுத்தி பேராவூரணி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.நாகராஜன் மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கபிடம் மனு அளித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி ரோட்டரி சங்கத்தின் முன்னாள் தலைவர் எஸ்.நாகராஜன், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்பிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, "பேராவூரணி நகரப் பகுதியில் இருவழிச் சாலையாக மாற்றப்பட்டு, மக்கள் நடந்து செல்வதற்கு நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. இந்த நடைமேடை பகுதியை, ஆக்கிரமிப்பு செய்து, தனி நபர் கடைகளின் விஸ்தீரன பகுதியாக மாற்றி விட்டார்கள். இதனால் மக்கள் நடந்து செல்ல மிகுந்த சிரமமாக உள்ளது. அதிலும் குறிப்பாக பழக்கடைகள் தங்களது கடைப்பகுதிக்கு வெளியில் தார்ச்சாலையிலே தான் கடை நடத்துகின்றனர்.

பேராவூரணி ஆவணம் சாலை முக்கத்தில் அமைக்கப்பட்டுள்ள காவலர் கண்காணிப்பு கூடாரம் பயன்பாட்டில் இல்லாமல் உள்ளது. மேலும் இந்த கூடாரமானது ஆவணம் சாலையில் இருந்து வருபவர்களுக்கு பிரதான சாலையில் வருபவர்களை தெரியவில்லை. இதனால் பல நேரங்களில் விபத்து ஏற்படும் சூழல் உருவாகின்றது. இதனை தவிர்க்கும் பொருட்டு கண்காணிப்பு கூடாரத்தை எதிரே உள்ள பெரியார் சிலை அருகில் அமைத்தால் போக்குவரத்தை கண்காணிப்பதும் எளிது, விபத்தினையும் தவிர்த்திடலாம். பேராவூரணி பிரதானச் சாலையில், ரயில் நிலையம் அருகிலும், கனரா வங்கி அருகிலும் எப்பொழுதுமே வாகனங்கள் சாலையில் நிறுத்தி வைக்கப்படுகின்றது. இதனால் பல நேரங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகின்றது. விபத்தும் நடந்துள்ளது.

சிறார்கள் அதிக செயல்திறன் கொண்ட இருசக்கர வாகனங்களை கொண்டு நகர் பகுதிகளில் அதி விரைவாக செல்வதோடு, பந்தயமும் மேற்கொள்கிறார்கள். விபத்துக்கும் வழிவகுக்கின்றனர். தார்ச்சாலைகளில் போடப்படுகின்ற வேகத்தடையானது, சிறு மலை போன்றும் வாகனங்கள் ஏறி இறங்க முடியாத வண்ணம் போடப்படுகின்றது. இதில் வாகனங்கள் ஏறிச்செல்லும் பொழுது வாகனத்தின் கீழ் பாகம் சிதைவடைகின்றது. மேலும் இவ்வாறாக அமைத்த வேகத்தடைக்கு சாலையின் இருபுறமும் எச்சரிக்கைப் பலகைகள் இல்லாமலும், வேகத்தடையின் மீது எவ்வித வண்ணப்பூச்சுக்கள் இல்லாமலும் உள்ளது. பேராவூரணி பேருந்து நிலையத்தில் இருந்து இரவு 8 மணிக்கு மேல் பட்டுக்கோட்டை செல்ல பேருந்து வசதியில்லை.

இரவில் பயணம் மேற்கொள்ள முடியாத நிலை நீடிக்கிறது. அதனைப் போன்று இரவு 10 மணிக்கு மேல் பேராவூரணிக்கு பட்டுக்கோட்டையில் இருந்து பேருந்து வசதி இல்லை. இந்த வசதிகள் அனைத்தும் முன்னர் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. பேராவூரணி பேருந்து நிலையத்தில் உள்ள பொது கழிப்பறை சுகாதாரமற்ற முறையிலும், பராமரிப்பு இல்லாத நிலையில் உள்ளது. இதற்கு தண்ணீர் வசதியும் இல்லாமல் உள்ளது. எனவே, மேற்கண்ட இந்த பிரச்னைகளை சரிசெய்து தருமாறு பணிவுடன் கேட்டுக் கொள்கிறோம்" இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story