சட்ட விரோதமாக செயல்படும் ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை

சட்ட விரோதமாக செயல்படும் ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்ற கோரிக்கை

மனு அளித்த எம்பி

சட்ட விரோதமாக செயல்படும் ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்ற மத்திய அமைச்சரிடம் எஸ்.ஆர்.பார்த்திபன் எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

சேலம் தி.மு.க. எம்.பி. எஸ்.ஆர்.பார்த்திபன், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை மந்திரி நிதின்கட்கரியை சந்தித்து ஒரு கோரிக்கை மனுவை அளித்தார். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- ஓமலூர்-சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை எண் -7 திட்டம் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டம் வழியாக ஓமலூரில் இருந்து நாமக்கல் வரை நீண்டுள்ளது.

தனியார் நிறுவனம் தும்பிப்பாடியில் இருந்து நாமக்கல் வரை 180 கிலோமீட்டர். முதல் 249 கிலோமீட்டர் வரை நான்கு வழிச்சாலையை அமைத்துள்ளது. அதேபோல், தும்பிப்பாடியில் இருந்து குரங்குச்சாவடி வரையிலான நான்கு வழிச்சாலையை மத்திய அரசின் நிதியை கொண்டு பொதுமக்களின் வரிப்பணத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையம் (நகாய்) நிர்ணயித்த விதிமுறைகளை மீறி தனியார் நிறுவனம் மத்திய அரசு நிதியுதவிடன் அமைக்கப்பட்ட நான்கு வழிச்சாலையில் 191 கிலோ மீட்டர் தொலைவில் ஓமலூரில் ஒரு சுங்கச்சாவடியை சட்ட விரோதமாக நிறுவி உள்ளது. ஓமலூர் சுங்கச்சாவடி மற்றும் உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஆகிய இரண்டும் சட்ட விரோதமானவை என்றும், அவற்றை இடமாற்றம் செய்வதாகவும் டெல்லியில் நடைபெற்ற மத்திய போக்குவரத்துறை கூட்டத்தில் அகில இந்திய லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் உறுதியளித்த போதிலும், இந்த அங்கீகாரமற்ற சுங்கச்சாவடிகள் தொடர்ந்து இயங்கி வருகிறது. 6 மாதங்களுக்குள் சுங்கச்சாவடியை நேரில் பார்வையிட்டு அதை அகற்ற தேவையான நடவடிக்கையை எடுப்பதாக நகாய் இயக்குனர் உறுதியளித்தார். ஆனால் இன்னும் அகற்றப்படவில்லை. ஓமலூரில் இருந்து சேலம் வரையிலான 19 கிலோ மீட்டர் சாலையை மட்டுமே பயன்படுத்தினாலும் வாகன உரிமையாளர்கள் மொத்தம் 79 கிலோமீட்டருக்கு சுங்க கட்டணம் செலுத்த வேண்டும். எனவே, ஓமலூர் சுங்கச்சாவடியை அகற்றி இடமாற்றம் செய்ய வேண்டும். கூடுதலாக ஓமலூர் தும்பிப்பாடியில் இருந்து சேலம் வரையிலான 19 கிலோ மீட்டர் தூரத்திற்கு பராமரிப்பு கட்டணம் வசூலிக்கும் பொறுப்பை நகாய் ஏற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags

Next Story