ராமநாதபுரம்: நாதக நிர்வாகி படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்: நாதக நிர்வாகி படுகொலை கண்டித்து ஆர்ப்பாட்டம்

நாதக நிர்வாகி கொலை

ராமநாதபுரம் மாவட்டம், சாயல்குடியில் நாம் தமிழர் கட்சி நிர்வாகி படுகொலையை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட நாம் தமிழர் கட்சியின் தக்களை ஒன்றிய தலைவராக பொறுப்பில் இருந்தவர் சேவியர் குமார். கடந்த சில தினங்களுக்கு முன் மர்ம நபர்கள் அவரை படுகொலை செய்தனர். பரபரப்பான இந்த படுகொலையில் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக கைது செய்ய வலியுறுத்தி சாயல்குடி மூக்கையூர் சந்திப்பு கிழக்கு கடற்கரை சாலையில் நாம் தமிழர் கட்சி சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதே சம்பவத்தைப் போலவே கடந்த சில மாதங்களுக்கு முன், சாயல்குடியிலும் நாம் தமிழர் கட்சி நிர்வாகி ஒருவரை கிராம நிர்வாகிகள் என்ற போர்வையில் திமுக கிளைச் செயலாளர் தலைமையில் தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாயல்குடி காவல்துறை அதிகாரிகளை கண்டித்தும், தொடர்ந்து பனை மரங்கள் வெட்டுவோர் மீது நடவடிக்கை எடுக்க தயங்கும் காவல்துறை மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகளை கண்டித்தும், முதுகுளத்தூர், கமுதி, சாயல்குடி பகுதிகளில் கல்லூரி, பள்ளி மாணவர்களிடையே பெருகிவரும் கஞ்சா மற்றும் போதை பழக்கங்கள் அதிகமாகி வருவதை கண்காணித்து தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இராமநாதபுரம் மேற்கு மாவட்ட செயலாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், மாநில கொள்கை பரப்பு செயலாளர் வினோத்குமார், மாநில இளைஞர் பாசறை செயலாளர் பஷீர் அகமது முன்னிலை வைத்தனர். கடலாடி மேற்கு ஒன்றிய செயலாளர் பழனி முருகன் வரவேற்றார். மாவட்ட பொருளாளர் பயாஸ் அகமது, தொகுதி தலைவர் ராஜபாண்டியன், செயலாளர் வெங்கடேஷ், நகர் தலைவர் ஆல்பர்ட், முன்னாள் ஒன்றிய செயலாளர் நீதி மன்னன் ஆகியோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில் நகர் செயலாளர் சதாம் உசேன் நன்றி கூறினார்.

Tags

Next Story