கட்டுமான பொருட்களின் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்



கட்டிட மற்றும் சாலைப்பணிகளுக்கு தேவையான எம் சேண்ட், பி சேண்ட் மற்றும் ஜல்லி வகைகள் போன்ற கட்டுமானப்பொருட்களின் கடுமையான விலையேற்றத்தை, அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் வகையில் நாமக்கல் பஸ்நிலையம் அருகிலுள்ள பூங்கா சாலையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு, அகில இந்திய கட்டுனர் சங்க (BAI) மாவட்ட தலைவர் தேவராஜ் தலைமை வகித்தார்.
நாமக்கல் மாவட்ட கட்டிட பொறியாளர்கள் சங்க தலைவர் இளமுருகேசன், தமிழ் மாநில கட்டிட தொழிலாளர் சங்க மாவட்ட தலைவர் சரவணன், நெடுஞ்சாலைத்துறை சங்க தலைவர் ராமசாமி, பொதுப்பணித்துறை சங்க மாவட்ட தலைவர் மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இது குறித்து, அகில இந்திய கட்டுனர் சங்க மாவட்ட தலைவர் தேவராஜ் கூட்டத்தில் பேசும்போது..... கட்டுமானப் பொருட்களின் கடும் விலை உயர்வால், அனைத்து அரசு துறைகளின் பணிகளை ஒப்பந்தம் எடுத்து செய்து கொண்டிருக்கும் ஒப்பந்ததாரர்கள், தொடர்ந்து பணிகளை செய்ய முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
வேலைகளை நிறுத்தம் செய்ய வேண்டிய சூழ்நிலையும், அதன் மூலம் தொழிலாளர்களுக்கு வேலை இழப்பும் ஏற்படுகிறது. தற்போது மேற்கொண்டுள்ள வேலைகளை குறித்த காலத்தில் முடிக்க, அரசு உடனடியாக பரிசீலித்து, சந்தை விலையை குறைத்தோ அல்லது சந்தை விலைக்கு ஏற்றவாறு ஒப்பந்த தொகையை உயர்த்தி தரவேண்டும். எங்களது முக்கிய கோரிக்கையாக, கனிம பொருட்களின் விலையை கட்டுப்படுத்த ஒழுங்குமுறை ஆணையம் அமைக்க வேண்டும்.
சிமெண்ட், தார் மற்றும் கம்பிகளின் விலை ஏற்றம் மற்றும் இறக்கம் ஏற்படும் போது, விலை விகிதாச்சாரத்துடன் கூடிய விலை பட்டியல் வழங்குவதை போல், கனிம பொருட்களான கருங்கல், ஜல்லி, எம்.சேண்ட், பி.சேண்ட் விலை மாற்றத்திற்கு தருவதற்கான வழிமுறைகள் ஏற்படுத்தி தர வேண்டும். கட்டுனர்களின் வாழ்வாதாரத்தையும், கட்டுமான தொழிலாளர் நலனையும், அரசு பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பின்னர் கட்டுமானர்கள் சங்கம் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. இதில் அகில இந்திய கட்டுனர் சங்கத்தினர், மாவட்ட கட்டட பொறியாளர்கள் சங்கத்தினர், ஒப்பந்ததாரர்கள் என 500 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.




