பெருமாநல்லூரில் கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில் ஆர்ப்பாட்டம்
பொங்குபாளையம் ஸ்ரீ மாரியம்மன் கோவிலை அறநிலையத் துறையிடம் இருந்து விடுவிக்க கோரி கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில் பெருமாநல்லூரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் ஸ்ரீ விநாயகர் ஸ்ரீ மாரியம்மன் ஸ்ரீ மாகாளியம்மன் கோவில் இருந்து வருகிறது.
இது அப்பகுதியை சேர்ந்த ஏராளமான மக்களுக்கு குலதெய்வ கோயிலாகவும் உள்ளது. அனைத்து சமுதாய மக்களும் இங்கு வழிப்பட்டு வரக்கூடிய நிலையில் கடந்த மாதம் அரசியல் லாபத்திற்காக ஒரு சிலர் ஆலய நுழைவுப் போராட்டம் என்ற பெயரில் தவறான தகவல்களை அரசிடம் கொடுத்து அறநிலையத்துறை மற்றும் காவல்துறை உதவியுடன் கோவிலுக்குள் பொங்கல் வைத்து வழிபட்டதோடு , சாதிய வன்முறையை ஏற்படுத்தும் வகையில் கோவிலுக்குள் தங்கள் அனுமதிக்கப்பட்டதில்லை என்ற தவறான குற்றச்சாட்டை முன்வைத்து வருவதாகவும் , இதற்கு அறநிலையத்துறை அதிகாரிகளும் உடந்தையாக செயல்படுவதால் தங்கள் குலதெய்வ கோவிலை அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இருந்து விடுவித்து கோவில் உரிமையை பெற்று தருமாறு கொங்கு வேளாளர் கவுண்டர்கள் பேரவை சார்பில் திருப்பூர் பெருமாநல்லூர் நால்ரோடு பகுதியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட கொங்கு வேளாளர் கவுண்டர் பேரவையின் மாநில செயலாளர் சூரியமூர்த்தி இப் பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்வது மட்டுமல்லாமல் , சட்டரீதியாகவும் சட்ட போராட்டத்தில் ஈடுபட இருப்பதாகவும் தெரிவித்தார்.