சாலை பணிகளை துவக்கக்கோரி மார்க்சிஸ்ட் கம்யூ., ஆர்ப்பாட்டம்
மரியகிரியில் சாலை பணிகளை உடனடியாக துவங்க கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கடந்த 2021 ஆம் ஆண்டு ஏற்பட்ட கன மழையால் மரியகிரி அருகே நெய்யாறு இடதுகரை கால்வாய் கரையில் மண்சரிவு ஏற்பட்டு ஏலூர்காடு - முப்பந்திக்கோணம் சாலை துண்டிக்கப்பட்டது. இச் சாலை சீரமைக்கும் பணி தமிழக பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எஸ். ராஜேஷ்குமார் எம்எல்ஏ ஆகியோரால் கடந்த 7 மாதங்களுக்கு முன் தொடங்கி வைக்கப்பட்டது. அதன் பின்னர் வேலை செய்யாமல் காலம் தாழ்த்தும் பணி ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுத்து, போர்க்கால அடிப்படையில் இப்பணியை செய்து முடிக்க கேட்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மெதுகும்மல் வட்டாரக் குழு உறுப்பினர் பி. ராஜூ தலைமைவகித்தார். முன்னாள் எம்எல்ஏ லீமாரோஸ் போராட்டத்தை துவக்கி வைத்துப் பேசினார். கட்சி நிர்வாகிகள் விஜயா, சிதம்பரகிருஷ்ணன், சுரேஷ்குமார் ஆகியோர் போராட்டத்தை விளக்கிப் பேசினர். கட்சியின் மெதுகும்மல் வட்டாரக்குழு செயலர் கே. தங்கமணி போராட்டத்தை நிறைவு செய்து பேசினார். கட்சி நிர்வாகிகள் ராஜேஷ், ரிஷிகுமார்,. ஜெயன், லாரன்ஸ், ரீனா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.