திருப்பூரில் சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

திருப்பூரில் சாலையை சீரமைக்க கோரி ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியினர்


திருப்பூரில் சாலையை சீரமைக்க கோரி மார்க்சிஸ்ட்கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர் மாவட்டம் அனுப்பர்பாளையம், வேலம்பாளையம், கன்னியாபூண்டி, பொதிகை நகர், தண்ணீர்ப்பந்தல் ஆகிய பகுதிகளுக்கு உட்பட்ட தொழிலாளர்கள், பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், தொழில் நிறுவனங்களின் வாகனங்கள் என ஆயிரக்கணக்கானோர் தினம்தோறும் வேலம்பாளையம் - சோளிபாளையம் சாலையைப் பயன்படுத்தி வருகின்றனர். இந்த சாலை சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக உள்ளது.

இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. சாலை அமைக்கும் பணியும் கிடப்பில் போடப்பட்டுள்ளது. மேலும், பாதாளச் சாக்கடைப் பணிகள், அதானி கேஸ் பைப் பதிக்கும் பணிகள் எனக் குழிகள் தோண்டுவதும் மூடுவதுமாக இருந்து வருவதால், அரசு நகரப் பேருந்துகளும் இப்பகுதிகளுக்குள் வருவதில்லை. மழைக்காலங்களில் சாலையில் உள்ள குழிகளில் மழை நீர் தேங்குவதால் எது சாலை, எது குழி என்று தெரியாமல் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இதுகுறித்து பல முறை நெடுஞ்சாலைத் துறையினருக்கு தகவல் அளித்தும் சாலை அமைப்பதில் காலதாமதம் செய்து வருகின்றனர்.

நெடுஞ்சாலைத் துறையின் இந்த மெத்தனப்போக்கைக் கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேலம்பாளையம் எ.கிளை செயலாளர் எம்.வெள்ளியங்கிரி தலைமையில் திங்களன்று சோளிபாளையம் சாலையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. உடனடியாக சாலையைச் சீரமைக்காவிட்டால் வரும் டிச.15 ஆம் தேதி சாலை மறியலில் ஈடுபடுவோம் எனத் தெரிவித்துள்ளனர்.

இதில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், வேலம்பாளையம் நகரச் செயலாளர் ச.நந்தகோபால், மாற்றுத் திறனாளிகள் சங்க மாவட்டச்செயலாளர் பா.ராஜேஷ், சிஐடியு மாவட்டக்குழு உறுப்பினர் எம்.பாண்டியராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அனைப்பாளையம் மாதர் கிளை செயலாளர் செல்வி ஆகியோர் கண்டன உரையாற்றினர். இதில் திரளானோர் பங்கேற்றனர்.

Tags

Next Story