நிலம் கையகப்படுத்தும் அரசாணையை திரும்ப பெறக் கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம்
காஞ்சிபுரம் விமான நிலையம் சுமார் 5746 ஏக்கர் நிலத்தில் அமைக்க நிலம் கையகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக அரசு அரசாணை எண் 210ல் 13 கிராமங்களில் இருந்து பட்டா நிலம் 3 ஆயிரத்து 774 ஏக்கரும் அரசு நிலம் 1972 ஏக்கரும் 1005 வீடுகள் 13 ஏரிகள் குட்டை குளம் என எட்டு கிலோமீட்டர் தூரம் உள்ள பம்பை கால்வாய் உட்பட இதில் பாதிக்கப்படுகிறது. இத்திட்டத்தை கைவிடக் கோரி ஏகனாபுரம் கிராம பொதுமக்கள் 512 நாட்களாக பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் அரசு நிலம் கையகப்படுத்துவதில் தொடர்பாக பல்வேறு நடவடிக்கை தொடர்ச்சியாக எடுத்து வருவதால், பரந்தூர் வட்டார விவசாயிகள் வாழ்வாதார பாதுகாப்புக்குழு சார்பில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே 200க்கும் மேற்பட்டோர் தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சண்முகம் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் கிராமங்களை விவசாயிகளையும் அழித்து உருவாக்கும் இந்த திட்டத்தை கைவிட கோரி கோஷங்கள் எழுப்பி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனைத் தொடர்ந்து பேசிய மாநில தலைவர் சண்முகம் , அரசு உடனடியாக அரசாணை 210 திரும்ப பெற வேண்டும் , பொது மக்களை கருத்துக்களையும் அமைய உள்ள இடங்களையும் ஆய்வு செய்வதாக கூறி அமைக்கப்பட்ட மச்சேந்திரநாதன் குழு அதனுடைய அறிக்கையை முழுமையாக வெளிப்படையாக வெளியிட வேண்டும், இத்திட்டம் நிறைவேற்றப்பட்டால் உணவு பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்படும் நிலை உருவாகும் எனவே இதனை சட்டத்தின் வாயிலாக நிலம் கையகப்படுத்தும் உரிமை அரசுக்கு இல்லை என்பதை தெளிவாக புரிந்து கொண்டு மாநில அரசு செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டார். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட செயலாளர் நேரு , பரந்தூர் ஏகனாபுரம், நெல்வாய் உள்ளிட்ட கிராம கூட்டமைப்பு முக்கிய நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர். இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தை ஒட்டி ஏ டி எஸ் பி வெள்ளத்துரை தலைமையிலான போலீஸ் பாதுகாப்பு அப்பகுதியில் போடப்பட்டது.