உபரிநீர் திட்டத்தை செயல்படுத்த கோரி ஆர்ப்பாட்டம் - அன்புமணி பங்கேற்பு
அன்புமணி ராமதாஸ்
மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் நாளை(18ம் தேதி) மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது.
இதுகுறித்து பாமக கௌரவ தலைவர் ஜிகே.மணி எம்எல்ஏ, தர்மபுரி மேற்கு மாவட்ட செயலாளர் வெங்கடேஷ்வரன் எம்எல்ஏ, கிழக்கு மாவட்ட செயலாளர் அரசாங்கம் ஆகியோர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தர்மபுரி மாவட்டத்தில் நிலவும் வறட்சியைப் போக்கி, விவசாயத்தை செழிக்க வைக்கும் வகையில், காவிரி ஆற்றில் மழைக்காலங்களில் செல்லும் உபரி நீரை தர்மபுரி மாவட்ட ஏரிகள் மற்றும் குளங்களில் நிரப்பும் திட்டத்தை செயல்படுத்த வலியுறுத்தி பாமக சார்பில் நாளை (18ம்தேதி) காலை 10 மணிக்கு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடக்கிறது. ஆர்ப்பாட்டத்திற்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தலைமை வகிக்கிறார். இதில் பாமக, வன்னியர் சங்கம், இளைஞர் சங்கம்,மகளிர் சங்கம், மாணவர் சங்கம், பா.ம.க அமைப்பு,இளம் பெண்கள் சங்கம், தேர்தல் பணிக் குழு,கொள்கை விளக்க அணி,சமூக ஊடகப் பேரவை,பசுமை தாயகம், அன்புமணி தம்பிகள் படை, அன்புமணி தங்கைகள் படை, தமிழ்நாடு உழவர் பேரியக்கம், பாட்டாளி தொழிற்சங்கம், வழக்கறிஞர் சமூக நீதி பேரவை உள்ளிட்ட அமைப்புகளின் மாநில, மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூர்,அணி, துணை, கிளை நிர்வாகிகளும், இளைஞர்கள், சமூக ஆர்வலர்கள், தொண்டு நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்களும் திரளாக போராட்டத்தில் கலந்துக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.