கருப்பு கொடி ஏந்தி ஊட்டியில் காங்., ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாடு மீனவர்களை இலங்கை கடற்படை தொடர்ந்து கைது செய்வது, தாக்குவது, வலை, படகுகளை சேதப்படுத்துவது, மீனவர்களை சுட்டுக் கொல்வது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனை கண்டித்து ராமேஸ்வரம் மீனவர்கள் தொடர் உண்ணாவிரதம் மற்றும் வேலைநிறுத்தப் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த நிலையில் தமிழக மீனவர்கள் மீது இலங்கை தாக்குதல் நடத்துவதற்கு மத்திய அரசு எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் பிரதமரின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் காங்., கட்சியினர் தமிழக முழுவதும் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் நீலகிரி மாவட்டம் ஊட்டி ஏ.டி.சி., சந்திப்பில் இன்று காங்., கட்சியினர் கருப்பு கொடி ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதற்கு காங்., எம்.எல்.ஏ., கணேசன் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷம் எழுப்பப்பட்டது. இதுகுறித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூறியதாவது:- பல்வேறு காரணங்களை கூறி தமிழக மீனவர்களை இலங்கை அரசு தொடர்ந்து கைது செய்கிறது.
மத்தியில் 2014-ம் ஆண்டு மோடி தலைமையிலான ஆட்சி பொறுப்பேற்ற பின், கடந்த 10 ஆண்டுகளில் தமிழக மீனவர்கள் 3179 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். மேலும் 400 படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. ஆனால் இவர்களை மீட்க மத்திய அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றனர்.