மண்பாண்டத் தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

மண்பாட தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்
மழைக்கால நிவாரணமாக மண்பாண்ட தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் நிவாரணத்தை 10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என மண்பாண்ட தொழிலாளர் சங்கம் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட மண்பாண்டத் தொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், நடைபெற்ற மக்கள் குறைதீர் கூட்டத்தில், ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம், தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர்கள் குலாலர்கள் சங்கம், தஞ்சை தெற்கு மாவட்டத் தலைவர் பேராவூரணி எஸ்.பழனிவேல் சங்கரன், வடக்கு மாவட்டத் தலைவர் பாண்டித்துரை தலைமையில், மண்பாண்ட தொழிலாளர்கள் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது, “ தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு, விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு, பச்சை அரிசி, கரும்பு, சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட உணவுப் பொருட்களை இலவசமாக வழங்கி வருகிறது.
மண்பாண்ட தொழிலாளர்களின் வாழ்வாதாரம் உயர்வும், தொழில் வளர்ச்சி மேம்படவும் பொங்கல் பண்டிகை அன்று குடும்ப அட்டைதாரர்களுக்கு மண்பானை, மண் அடுப்பு இலவசமாக வழங்கி தொழில் அபிவிருத்திக்கு உதவிட வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர்கள் அவரவர்கள் தொழில் செய்யும் பகுதியில் உள்ள ஏரி, குளங்களில் தேவையான களிமண் எடுக்க அனுமதி வழங்க வேண்டும். மண்பாண்டத் தொழிலாளர்களின், இதுவரை மழைக்காலம் நிவாரணம் கிடைக்கப் பெறாத விடுபட்ட குடும்பங்களுக்கு மழைக்கால நிவாரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக அரசு மீனவர்களுக்கு மழைக்கால நிவாரணத்தை 5 ஆயிரம் ரூபாயிலிருந்து 8 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கியதைப் போல, மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக் கால நிவாரணத்தை 10 ஆயிரம் ஆக உயர்த்தி வழங்க வேண்டும். கதர் கிராமத் தொழில் வாரியத்தில் உள்ள அனைத்து கைவினைஞர்கள் பொருட்களோடு, மண்பாண்டங்களை விற்பனை செய்ய, மண்பாண்ட தொழிலாளர்களுக்கும் தனியாக இடம் ஒதுக்கித் தர வேண்டும்" இவ்வாறு அம்மனுவில் கூறப்பட்டுள்ளது.