கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
ஆர்ப்பாட்டம் 
குமாரபாளையத்தில் கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி பொதுநல அமைப்பினர், அனைத்து கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஒன்றிய அரசு கல்விக்கடனை ரத்து செய்யக்கோரி குமாரபாளையம் பொதுநல அமைப்பினர், அனைத்து அரசியல் கட்சியினர் சார்பில் ஆர்ப்பாட்டம் பள்ளிபாளையம் பிரிவில் பஞ்சாலை சண்முகம் தலைமையில் நடந்தது. பஞ்சாலை சண்முகம் கூறியதாவது: தமிழகம் முழுதும் உள்ள லட்சக்கணக்கான முதல் நிலை பட்டதாரிகள் அனைவரும் எளிதில் உயர்கல்வி பெறவேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் ஒன்றிய அரசு ஏழை, எளிய, நடுத்தர வர்க்க பொதுமக்கள் சுமையை குறைக்க கல்விக்கடன் வழங்கியது. இதனை பெற்ற மாணவ, மாணவியர் கல்வி பயின்று வேலை வாய்ப்பின்றி தவிக்கும் நிலையில், வங்கி நிர்வாகத்தினர், மாணவர்கள் பெற்ற கடனை செலுத்த கட்டாயப்படுத்தியும், தனியார் நிறுவன ஊழியர்கள் மூலம் மிரட்டி வசூல் செய்யும் நிலையை செய்து வருகிறார்கள். பல கோடீஸ்வரர்கள் கடனை தள்ளுபடி செய்யும் ஒன்றிய அரசு மாணவர்கள் வாங்கிய கல்விக்கடனை ரத்து செய்ய வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இவ்வாறு அவர் கூறினார். இதில் காங்கிரஸ் ஜானகிராமன், தி.மு.க. ரவி, தி.க. சரவணன், வக்கீல் கார்த்தி, நிலமுகவர் சங்க தலைவர் சின்னசாமி, மக்கள் நீதி மய்யம் சித்ரா, உஷா, விமலா, மல்லிகா, உள்பட பலர் பங்கேற்றனர்.

Tags

Next Story