தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி மறுப்பு - ஏமாற்றமடைந்த பொதுமக்கள்

தனியார் பொருட்காட்சிக்கு அனுமதி மறுப்பு - ஏமாற்றமடைந்த பொதுமக்கள்
பொருட்காட்சி
பேராவூரணியில், தனியார் பொருட்காட்சி நடத்த அனுமதி இல்லை எனக்கூறி, வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள் தடுத்து நிறுத்தியதால், பொதுமக்கள் கண்காட்சியிலிருந்து பாதியிலேயே வெளியேறினர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே, இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இடத்திற்கு அனுமதி பெற்று, தனியார் பொருட்காட்சி கடந்த சில தினங்களாக பெரும் பொருள் செலவில் அமைக்கப்பட்டு வந்தது. இந்த பொருள்காட்சி கடந்த 9 ஆம் தேதி தொடங்கப்படும் என்ற அறிவிப்பு செய்திருந்த நிலையில், நேற்று புதன்கிழமை மாலை 5 மணிக்கு தொடங்கியது. இதையடுத்து பெண்கள், சிறுவர்கள், குழந்தைகள் பொருட்காட்சிக்கு ஏராளமானோர் வரத் தொடங்கினர்.

இந்நிலையில் அங்கு வந்த பேராவூரணி வருவாய் ஆய்வாளர் ஜெயதுரை மற்றும் கிராம நிர்வாக அலுவலர்கள் பொருட்காட்சி நடத்த அனுமதி இல்லை எனக் கூறி அங்கிருந்து நிர்வாகிகளிடம், கண்காட்சியை நிறுத்துமாறும் மின்விளக்குகளை அணைக்குமாறும் தெரிவித்தனர். அனுமதி பெற்று தான் நடத்துகிறோம் என நிர்வாகிகள் தெரிவித்த போதும், வருவாய் துறையினர் அதற்கான ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு கூறினார். பொருட்காட்சி நிர்வாகத்துனர் அளித்த ஆவணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. எனக்கூறி கண்காட்சியை உடனடியாக நிறுத்துமாறும், பொதுமக்களை வெளியேற்றுமாறும் வருவாய்த் துறையினர் உத்தரவிட்டனர்.

இதையடுத்து பொதுமக்கள் பாதியிலேயே அனுமதி கட்டணப் பணத்தை பெற்றுக்கொண்டு வெளியேறினர். இது குறித்து பொருள்காட்சி நடத்தும் நிர்வாகத்தினர் குழுக்களில் கடந்த 30 ஆண்டுகளாக இத்துறையில் அனுபவம் பெற்றுள்ளோம். தலைமைச் செயலகம் முதல் ஆட்சியர் அலுவலகம் வரை, பல்வேறு துறைகளின் ஒப்புதல் கடிதத்தோடு ஒரு மாத காலம் நடத்துவதற்கு அனுமதி பெற்றுள்ளோம். தற்போது பத்து தினங்களுக்கு மேலாக பொருட்காட்சி நடத்த முடியாமல் உள்ளது. இன்னும் குறுகிய தினங்களே உள்ளன. ஆனால் பேராவூரணி வட்டாட்சியர் தங்களுக்கு தனியாக ஆட்சியரிடம் இருந்து அனுமதி ஆணை வந்தால் மட்டுமே நடத்த முடியும் என பொருட்காட்சி நடத்த அனுமதி மறுக்கின்றனர். பெரும் பொருட்செலவில் இந்த கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளது. வருவாய்த் துறையினர் உத்தரவு காரணமாக பெரும் நட்டத்தை சந்திக்க வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக ஏராளமான தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்" என்றனர்.

வருவாய் துறையினரிடம் கேட்டபோது," ஏதேனும் அசம்பாவிதங்கள் நடந்தால் நாங்கள் கைகட்டி நிற்க முடியாது. அவர்கள் அளிக்கும் ஆவணங்கள் ஏற்கத்தக்கது அல்ல. ஆட்சியரோ, வருவாய் கோட்டாட்சியாரோ அனுமதி அளித்த கடிதத்தை கொடுத்தால் மட்டுமே நடத்த அனுமதிக்க முடியும்" என தெரிவித்தனர். இதன் காரணமாக கடந்த சில நாட்களாகவே அமைக்கப்பட்டும் பொருட்காட்சி நடத்த முடியாமல் உள்ளது. மேலும் பாதியிலேயே வெளியேற்றப்பட்டதால் பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்தனர். இந்நிலையில், இன்று புதன்கிழமையும் பொருட்காட்சி அனுமதி இல்லை என வருவாய்த்துறையினர் நடத்த தடை விதித்ததால் மூடப்பட்டுள்ளது.

Tags

Next Story