கோவிலில் அனுமதி மறுப்பு - சமத்துவ பொங்கல் வைத்து தீர்வு

கோவிலில் அனுமதி மறுப்பு - சமத்துவ பொங்கல் வைத்து தீர்வு
வழிபாடு 
திருப்பூரில் இந்து சமய அறநிலையத் துறைக்கு உட்பட்ட கோவிலில் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதாக எழுந்த புகாரை தொடர்ந்து துணை வட்டாட்சியர் தலைமையில் சமத்துவ பொங்கல் வைக்கப்பட்டு கோவிலில் சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பொங்குபாளையம் பகுதியில் உள்ள இந்து சமய அறநிலையை துறைக்கு உட்பட்ட மாரியம்மன் கோவிலில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பட்டியல் சமூக மக்கள் நுழைய குறிப்பிட்ட சமூகத்தினர் தடை செய்து வைத்திருந்ததாகவும் , இதனை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆலய நுழைவு போராட்டம் அறிவிக்கப்பட்டிருந்தது. போராட்டத்தை கைவிட வலியுறுத்தும் வகையில் வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு நேற்று கோவில் வளாகத்தில் அனைத்து தரப்பினரும் சமத்துவ பொங்கல் வைத்து வழிபாடு நடத்தலாம் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனை தொடர்ந்து துணை வட்டாட்சியர் பரமேஸ் மேற்பார்வையில் காவல்துறை பாதுகாப்புடன் பட்டியல் சமூக மக்கள், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்து சாமி தரிசனம் செய்தனர். 30 ஆண்டுகளுக்கு மேலாக விதிக்கப்பட்டிருந்த தடை தற்போது நீக்கப்பட்டு இருப்பதாகவும் , இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அமைக்கப்படும் கோவில் நிர்வாக குழுக்களில் அனைத்து சமூக மக்களையும் உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் கோவிலை சுற்றி பாதுகாப்பு பணியில் காவல்துறையினர் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

Tags

Next Story