வேளாண் திட்டப்பணிகளை ஆய்வு செய்த துணை இயக்குனர்
வானூர் வட்டாரத்தில்வேளாண் திட்டப்பணிகளை ஆய்வு செய்த துணை இயக்குனர்
விழுப்புரம் மாவட்டம் வானூர் வட்டாரத்தில் வேளாண்மை துறையின் கீழ் செயல்படுத்தப் படும் மத்திய, மாநில அரசு திட்டங்களின் செயல்பாடுகளை விழுப் புரம் மாவட்ட வேளாண் துணை இயக்குனர் (திட்டங்கள்) பெரிய சாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
தேசிய உணவு மற் றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு இயக்கத்தில் பயறு வகைகள் திட்டத் தின் கீழ் புளிச்சபள்ளம் கிராமத்தில் ஜான்சன் என்ற விவசாயியின் நிலத்தில் நெல் சி ஆர் 1009 சப் 1 ரகம் 2.5 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டிருந்ததை பார்வையிட்டார், அப்போது இலை சுருட்டுப் புழுவின் தாக்கம் ஒரு சில இடங்களில் இருந்ததால் பூச்சி மருந்துகள் அடிக்க பரிந்துரை செய்தார்.
பின்னர் இரும்பை கிராமத்தில் சிவஒளி என்ற விவசாயி சாகுபடி செய்துள்ள பாரம்பரிய நெல் ரகங்களான சீரக சம்பா, ஆத்தூர் கிச்சலி சம்பா போன்ற ரகங்களை துணை இயக்குனர் பெரியசாமி பார்வையிட்டு, இயற்கை வளர்ச்சி ஊக்கியாகிய பஞ்சகாவ்யா தெளிக்கும் படி அறிவுரை வழங்கினார். தொடர்ந்து இரும்பை கிராமத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வரும் திட்டத்தின் கீழ் 10 ஏக்கர் பரப்பளவில் கொய்யா சாகுபடி செய்திருந்ததை பார்வையிட்டு அதன் வளர்ச்சி நிலை குறித்து கேட்டறிந்தார்.
அப்போது கொய்யா ரகங்கள் நன்கு வளர்ச்சி நிலையில் உள்ளதால் ஊடுபயிராக மணிலா அல்லது உளுந்து சாகுபடி செய்யுமாறு அறிவுறுத்தினார். பின்னர் வானூர் வட்டாரத்தில் உள்ள அரசு விதைப்பண்ணையை ஆய்வு செய்து சம்பா பருவத்தில் இலக்கின்படி விதைப்பண்ணைகள் அமைக்கப்பட்டுள்ளதா என்பதை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ், வேளாண்மை அலுவலர்கள் ரேவதி, சவுந்தர்ராஜன், உதவி விதை அலுவலர் மோகன்குமார், உதவி வேளாண்மை அலுவலர் யமுனா, உதவி தோட்டக்கலை அலுவலர் கோபிநாத், ஆத்மா திட்ட அலுவலர்கள் கோவிந்தசாமி, சந்திரசேகர் ஆகியோர் உடனிருந்தனர்.