சாலை விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உயிரிழப்பு
சீனிவாசன்
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பலியான சம்பவம் அரசு அலுவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது
காஞ்சிபுரம் அடுத்த ராஜகுளம் பகுதியில் நடைபெற்ற சாலை விபத்தில் பலியான சம்பவம் அரசு அலுவலர்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் காஞ்சிபுரம், வாலாஜாபாத் , உத்திரமேரூர் , படப்பை, ஸ்ரீபெரும்புதூர் உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராக சீனிவாசன் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் வழக்கம் போல தனது இரு சக்கர வாகனத்தில் ஸ்ரீபெரும்புதூரில் இருந்து பணி முடித்துவிட்டு, தனது சக ஊழியருடன் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் காஞ்சிபுரம் நோக்கி வந்து கொண்டிருந்தபோது ராஜகுளம் என்கின்ற பகுதியில் வந்து கொண்டிருந்தபோது பின்னால் அதிவேகமாக வந்த கனரக லாரி மோதி லாரியின் பின் சக்கரங்களில் அவரது இரு கால்களில் ஏறியது. உடன் வந்த ஊழியர் சிறு காயங்களுடன் தப்பினார். விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த சீனிவாசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு காஞ்சிபுரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். உடனடியாக அவருக்கு உயிர் காக்கும் சிகிச்சைகள் அனைத்தும் மருத்துவர்களால் மேற்கொள்ளப்பட்ட நிலையில் , சீனிவாசன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து காஞ்சிபுரம் தாலுக்கா காவல் நிலைய காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்து ஏற்படுத்திய வாகனம் மற்றும் ஓட்டுநர் குறித்த விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர். நாளை மறுநாள் தேர்தல் பயிற்சி பணிகள் அப்பகுதியில் நடைபெற உள்ள நிலையில் அந்தப் பணிகளையும் மேற்கொண்டு விட்டு அலுவலகத்தில் இருந்து சக நண்பர்களுக்கு தெரிவித்துவிட்டு வீடு திரும்பிய நிலையில் வாகன விபத்தில் சிக்கிய தகவல் சக அரசு ஊழியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்தாண்டே விருப்ப ஓய்வு பெற விரும்புவதாக உயர் அலுவலரிடம் மனு அளித்துள்ளதாக கூறப்படுகிறது.
Next Story