விவசாயிகளின் எதிர்ப்பை மீறி சிபிசிஎல் நிலம் அளவீடு பணிகளால் பரபரப்பு
நிலம் அளவீடு
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் பனங்குடி ஊராட்சியில் அமைந்துள்ள மத்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான சி.பி.சி.எல் நிறுவனம் 31 ஆயிரத்து 500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்க பணிகளை தொடங்கி உள்ளது. சுத்திகரிப்பு ஆலை விரிவாக்கத்திற்காக பனங்குடி, நரிமணம், கோபுராஜபுரம் உள்ளிட்ட ஊராட்சிகளில் 620 ஏக்கர் விவசாய நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. ஆனால் கையகப்படுத்தப்பட்ட விவசாய நிலங்களுக்கு மறுவாழ்வு மீள் குடியமர்வு இழப்பீட்டு தொகை இதுவரை வழங்காத காரணத்தால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நிலத்தை அளந்து விரிவாக்கப்பணிகளை தொடங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், உரிய இழப்பீடு வழங்கக்கோரி பனங்குடி,நரிமணம், கோபுராஜபுரம் ஆகிய 3 ஊராட்சிகளை சேர்ந்த நில உரிமையாளர்கள், சாகுபடிதாரர்கள், கூலி விவசாயிகள் சி.பி.சி.எல் நிறுவனத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 10 வது நாளாக உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே கடந்த 2 நாட்களுக்கு முன்பு நாகை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் ஜானி டாம்வர்கீஸ் தலைமையில் நடைபெற்ற சுமூக பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்தது. இதனால் விவசாயிகள் போராட்டம் 10-வது நாளாக நேற்று தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் நில அளவீட்டு பணிகள் நடந்து வருகிறது.
நாகை எஸ்பி ஹர்ஸ்சிங் தலைமையில் 12 டிஎஸ்பிக்கள், 22 போலீஸ் இன்ஸ்பெக்டர் என நாகை, திருவாரூர், தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்களை சேர்ந்த சுமார் 800 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், நாகூர், கானூர், சேஷமூலை, உள்ளிட்ட சோதனை சாவடிகள் வழியாக வரும் வெளியூர் வாகனங்கள் பலத்த சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுகிறது. விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபடும் பகுதிகளை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு அளக்கும் பணிகள் பலத்த போலீஸ் பாதுகாப்போடு நடந்து வருகிறது. ரவிச்சந்திரன், கார்த்தி, ரமேஷ்குமார், சக்கரவர்த்தி உள்ளிட்ட 4 தாசில்தார்கள் தலைமையில் வருவாய் துறையினர் 4 குழுக்களாக பிரிந்து வெவ்வேறு இடங்களில் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.
4 தாசில்தார்களுடன், வட்ட துணை ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர்கள், நில அளவையர்கள் என 48 அரசு ஊழியர்கள் அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.விவசாய நிலத்தை கையகப்படுத்தி உள்ள சி.பி.சி.எல் நிறுவனம் 17 கிலோ மீட்டர் சுற்றளவில் சுற்றுசுவர் எழுப்பும் பணிகளை அடுத்தகட்டமாக தொடங்க உள்ளனர். விவசாயிகளின் கடும் எதிர்ப்புகளுக்கு மத்தியில் சி.பி.சி.எல் நிறுவனம் பலத்த போலிஸ் பாதுகாப்போடு விரிவாக்க பணிகளின் தொடக்கமாக நிலத்தை அளக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதால் 3 ஊராட்சிகளில் பலத்த போலீஸ் குவிக்கப்பட்டு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.