பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம் அழிப்பு

பெருமகளூரில் பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராயம், மதுபாட்டில்கள் மாவட்ட குற்றவியல் நீதித்துறை நடுவர் முன்னிலையில் குழியில் கொட்டி அழிக்கபப்ட்டன.

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே பெருமகளூரில், கள்ளத்தனமாக போலி மதுபானம் விற்பனை செய்யப்படுவதாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு தனிப்படையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உத்தரவின் பேரில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில், பட்டுக்கோட்டை மதுவிலக்கு காவல்துறை ஆய்வாளர் ஜெயா தலைமையிலான மதுவிலக்கு காவல்துறையினர் சந்தேகத்தின் அடிப்படையில் அப்பகுதியில் நின்றிருந்த வாகனம் ஒன்றை சோதனையிட்டனர்.

அதில் போலி மதுபாட்டில்கள் இருப்பது கண்டறியப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, புதுக்கோட்டை மாவட்டம் அணவயல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மதுவிலக்கு பிரிவினர் சோதனை நடத்தி, பிரபல கம்பெனிகளின் பெயரில் போலி லேபிள் ஒட்டப்பட்ட 620 எண்ணிக்கையிலான குவார்ட்டர் மது பாட்டில்களையும், 4 பிளாஸ்டிக் பேரல்களில் இருந்த, போலி மது தயாரிக்க வைத்திருந்த 680 லிட்டர் எரிசாராயத்தையும் கைப்பற்றினர். இது தொடர்பாக பட்டுக்கோட்டை மதுவிலக்கு அமல் பிரிவு காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்து என்ற தீனா, பாலமுருகன், சேகர், வீரன் என்ற பாலகிருஷ்ணன் ராஜ்குமார், சங்கர் உள்ளிட்ட 6 பேரை கைது செய்து பேராவூரணி நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பட்டுக்கோட்டை சிறையில் அடைத்தனர் .

இந்நிலையில், ஏப்ரல் ஐந்தாம் தேதி வெள்ளிக்கிழமை கைப்பற்றப்பட்ட எரி சாராயம், போலி மது பாட்டில்களை, மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் அழகேசன், பேராவூரணி வழக்கறிஞர் சங்க செயலாளர் சிவேதி நடராஜன் ஆகியோர் முன்னிலையில், பேராவூரணியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தரையில் குழி தோண்டி, எரிசாராயத்தையும், போலி மதுபாட்டில்களையும் கொட்டி அழித்தனர். அப்போது மதுவிலக்கு அமல் பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயா, தீயணைப்பு நிலைய அலுவலர் சீனிவாசன் மற்றும் காவல் துறையினர், தீயணைப்பு துறையினர் உடன் இருந்தனர்.

Tags

Next Story