வளர்ச்சித் திட்டப்பணிகள்: மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
ஆய்வு செய்த அதிகாரி
பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்தும், அரசுத்திட்டங்களின் செயல்பாடுகள் குறித்தும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் மேம்பாட்டு கழக மேலாண் இயக்குநரும், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆணையர் பொருப்பு மற்றும் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலருமான அனில் மேஷ்ராம், மாவட்ட ஆட்சியர் கற்பகம் முன்னிலையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பெரம்பலூர் மாவட்டம் குரும்பலூரில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவியர் விடுதியினை பார்வையிட்ட பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விடுதிகளில் தேவையான அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளதா என்பது குறித்து பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கிருந்த மாணவிகளிடம் அரசின் திட்டங்கள் முறையாக வழங்கப்படுகின்றதா என்று கேட்டறிந்தார். மாணவிகளுக்கு அளிக்கபப்டும் உணவின் தரம் குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
குரும்பலூர் மேட்டாங்காடு பகுதியில் ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில், விரிவான பள்ளி உள்கட்டமைப்பு மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் இரண்டு பள்ளி வகுப்பறை கட்டடம் கட்டும் பணிகளை பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதனைத் தொடர்ந்து அம்மாபாளையம் நியாய விலை கடையில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் குடிமைப் பொருட்கள் தரமாக உள்ளதா என்பது குறித்தும், அந்த நியாயவிலைக் கடைக்குட்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு போதிய அளவிலான உணவுப்பொருட்கள் இருப்பில் உள்ளதா என்பது குறித்தும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அம்மாபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மருந்துப் பொருட்களின் இருப்புப் பதிவேட்டினை ஆய்வு செய்தார். ஆரம்ப சுகாதார நிலையத்தின் சுற்றுப்புறங்களையும், நோயாளிகள் அனுமதிக்கப்படும் வார்டுகளையும், கழிவறைகளையும் தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் எனவும், அடிப்படை முதலுதவிக்கு தேவையான அனைத்து மருந்துப் பொருட்களையும் இருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும் என அங்கிருந்த மருத்துவர் மற்றும் செவிலியர்களுக்கு உத்தரவிட்டார். சத்திரமனை பகுதியில் ஊரக வளர்ச்சித் துறையின் சார்பில், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சித் திட்டத்தின் கீழ் கதிரடிக்கும் களம் கட்டப்பட்டு வருவதை பார்வையிட்ட கண்காணிப்பு அலுவலர் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்களின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். முன்னதாக பெரம்பலூர் மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வுக்கூட்டம் பெரம்பலூர் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அனில் மேஷ்ராம் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் கற்பகம் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வுகளில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் அ.லலிதா, வருவாய் கோட்டாட்சியர் பொருப்பில் உள்ள சத்தியபால கங்காதரன், ஊராட்சிகளுக்கான உதவி இயக்குநர் அருளாளன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அறிவழகன், பிரேமலதா, வட்டாட்சியர்கள் சரவணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.