வள்ளலாரின் பக்தர் உடல் புதைக்க எதிர்ப்பு
தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் வள்ளலாரின் பக்தர் உடல் புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
தொல்லியல் துறைக்கு சொந்தமான இடத்தில் வள்ளலாரின் பக்தர் உடல் புதைக்க அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
திருப்போரூர் பிரணவ மலை செல்லும் வழியில், வள்ளலாரின் பக்தரான பாலசுப்ரமணி, 89, என்பவர், சிறிய ஆசிரமம் அமைத்து, கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அன்னதானம் வழங்கிவந்தார். நேற்று, இவர் உடல்நலக்குறைவால் மறைந்தார். பக்தர்கள் மற்றும் உறவினர்கள், அவர் தங்கியிருந்த இடத்திலேயே அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். தொல்லியல் துறை சார்ந்த இடம் என்பதால், அதற்கு அப்பகுதிவாசிகள் எதிர்ப்பு தெரிவித்து தொல்லியல், வருவாய்த்துறையினர் மற்றும் போலீசாருக்கு புகார் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள், அங்கு அடக்கம் செய்ய மறுப்பு தெரிவித்தனர். மறைந்தவரின் பக்தர்கள் மற்றும் உறவினர்கள், உடலை அங்கேயே புதைக்க, தொல்லியல் துறையினரிடம் அனுமதி கேட்டனர். அதற்கு தொல்லியல் துறை அதிகாரிகள், தொல்லியல் சார்ந்த இடத்தில் அடக்கம் செய்ய, சட்டத்தில் இடம் இல்லை. மீறி செய்தால், எங்களுக்கு ஒரு லட்சம் அபராதம், 6 மாதம் சிறை தண்டனை கிடைக்கும் எனக்கூறி, மறுத்து விட்டனர். பின், பலசுப்பிரமணி குடும்பத்திற்கு சொந்தமான இடத்தில் அடக்கம் செய்ய ஆலோசனை மேற்கொண்டனர். அதிலும், உறவினர்களிடையே உடன்பாடு ஏற்படவில்லை. பின், திருப்போரூர் மயானத்தில் அடக்கம் செய்ய ஆலோசனை செய்தனர். இதற்கிடையில், வடலுார் அடுத்த கருங்குழி என்ற இடத்தில், சுப்பிரமணியின் பக்தரான வெங்கட் என்பவரின் இடத்தில் அடக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. இதையடுத்து, அவரது உடல் ஆம்புலன்ஸ் வாயிலாக, வடலுாருக்கு எடுத்து செல்லப்பட்டது.
Next Story