ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமத்தில் குவிந்த பக்தர்கள்

பக்தர்கள் கூட்டம்
பஞ்ச பூத திருத்தலங்களில் அக்னி தலமாகவும், நினைத்தாலே முக்தியளிக்கும் திருத்தலமாக விளங்குவது திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயில்.விடுமுறை தினத்தை ஒட்டி கோயிலுக்கு தரிசனம் செய்வதற்காக வரும் பக்தர்களின் எண்ணிக்கை வார நாட்களை விட மிகுதியாகவே காணப்படுகிறது. அந்த வகையில், மார்கழி முதல் நாள் என்பதாலும் விடுமுறை தினம் என்பதாலும் பக்தர்களின் வருகை மிக அதிகமாக இருந்தது. அதிகாலை முதலே பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையார் கோயிலில் தரிசனம் செய்ய குவிந்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோயிலில் குவிந்ததால் நீண்ட வரிசையில் சுமார் மூன்று மணி நேரம் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்களின் வருகை தொடர்ந்து அதிகரித்ததால் காவல்துறையினர் கோவிலில் தடுப்புகளை அமைத்து பக்தர்களை ஒழுங்குப்படுத்தி வரிசையில் அனுப்பினர். மேலும் மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கிரிவலப் பாதையில் உள்ள ஸ்ரீ சேஷாத்ரி ஆசிரமம், ரமணாஸ்ரமம், அஷ்ட லிங்கங்கள் உள்ளிட்ட கோவில்களில் பக்தர்களின் கூட்டம் அதிகமாக இருந்தது. ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.
