முருகன் கோவிலில் 3 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்
திருத்தணி முருகன்
திருத்தணி முருகன் கோவிலில் நேற்று பங்குனி மாத கிருத்திகை ஒட்டி அதிகாலை, 5:30 மணி முதலே மலைக்கோவிலில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்தனர். இதனால் பொது வழியில் மூலவரை தரிசிக்க, மூன்று மணி நேரம் தேர்வீதியில் நீண்ட வரிசையில் கடும் வெயிலிலும் காத்திருந்து மூலவர் முருகப் பெருமானை தரிசித்தனர்.
அதே போல், 100 சிறப்பு தரிசன டிக்கெட் பெற்ற பக்தர்களும் இரண்டு மணி நேரம் வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர். கிருத்திகை விழா ஒட்டி, அதிகாலை, 4:00 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், தங்கவேல், தங்ககீரிடம் மற்றும் வைர ஆபரணங்கள் அணிவித்து சிறப்பு தீபாராதனை நடந்தது.
காலை, 9:30 மணிக்கு உற்சவர் முருகப்பெருமான், வள்ளி, தெய்வானைக்கு காவடி மண்டபத்தில் பஞ்சாமிர்த அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடந்தது. அதிகளவில் மலைக்கோவிலுக்கு வாகனங்கள் வந்ததால் மலைப்பாதையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வேலுார் மாவட்டம், வள்ளிமலையில் நேற்று சிறப்பு உற்சவம் நடந்தது. ஊர்க்கோவிலில் காலை 8:00 மணிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடந்தது. மலைக்கோவிலில் காலை 9:00 மணி முதல் சிறப்பு தரிசனம் நடந்தது. வள்ளிமலை, பொன்னை, சோளிங்கர், மேல்பாடி, கோட்டநத்தம், விடியங்காடு உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள், மலைக்கோவிலுக்கு வந்திருந்தனர். வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.