தேரோட்ட சாலையை சீரமைக்க பக்தர்கள் நல கூட்டமைப்பு மனு

தேரோட்ட சாலையை சீரமைக்க பக்தர்கள் நல கூட்டமைப்பு மனு

புதைவட கேபிள் அமைக்கும் பணி 

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவில் தேரோட்ட சாலையில் புதைவட கேபிள் வழித்தடம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட குழிகளை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டர் , மாநகராட்சி கமிஷனருக்கு, தமிழ்நாடு அனைத்து திருக்கோவில் பக்தர்கள் நல கூட்டமைப்பினர் மனு அனுப்பியுள்ளனர்.

காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை முதல் நாளான தமிழ் புத்தாண்டு அன்று, தங்கத்தேரில் எழுந்தருளும் காமாட்சியம்மன், நான்கு ராஜ வீதிகளிலும் பவனி வருவார். அதன்படி, நடப்பாண்டு தங்க தேரோட்டம் வரும் 14ல் நடக்கிறது. இந்நிலையில், தேரோட்டம் நடக்கும் சாலைகளில் ஒன்றான காமாட்சியம்மன் சன்னிதி தெருவில், மின்வாரியம் சார்பில், தரையில் புதைவட கேபிள் வழித்தடம் அமைக்க, சாலையின் இருபுறமும் பள்ளம் தோண்டப்பட்டு, கேபிள் பதிக்கும் பணி நடந்து வருகிறது.

சாலையின் இரண்டு புறமும் பள்ளம் தோண்டப்பட்டு, சிமென்ட் காரைகள் போக்குவரத்துக்கு இடையூறாக சாலையோரம் போடப்பட்டுள்ளதால், வாகன போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இதனால், தமிழ்ப் புத்தாண்டு அன்று காமாட்சியம்மன் கோவில் தேரோட்டத்தின்போது இடையூறு ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, புதைவட கேபிள் வழித்தடம் அமைக்கும் பணிக்காக தோண்டப்பட்ட சாலையை போர்க்கால அடிப்படையில் சீரமைக்க வேண்டும் என, காஞ்சிபுரம் கலெக்டருக்கும், மாநகராட்சி கமிஷனருக்கும், தமிழ்நாடு அனைத்து திருக்கோவில் பக்தர்கள் நல கூட்டமைப்பின் நிறுவன தலைவர் ராஜசேகர் கோரிக்கை மனு அனுப்பி உள்ளார்.

Tags

Next Story