கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

கிடாவெட்டி நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள்

நேர்த்தி கடன் செலுத்திய பக்தர்கள்


திண்டுக்கல்-திருச்சி 4 வழிச்சாலையில் அய்யலூர் அருகே அமைந்துள்ளது வண்டி கருப்பணசாமி கோவில். இந்த கோவிலிலுக்கு திண்டுக்கல், வடமதுரை, அய்யலூர் மட்டுமல்லாது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். குறிப்பாக புது வாகனம் வாங்கும் பக்தர்கள் முதலில் வண்டி கருப்பணசாமி கோவிலில் சிறப்பு பூஜை செய்த பின்னரே தங்கள் பயணத்தை தொடங்குகின்றனர்.

மேலும் இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் கோவிலில் சாமி தரிசனம் செய்து பாதுகாப்பான பயணத்திற்கு எலுமிச்சம்பழம் உள்ளிட்ட பூஜை பொருட்களை வாங்கி செல்வார்கள். கடந்த புரட்டாசி மாதத்தில் பெரும்பாலானோர் அசைவம் உண்பதில்லை என்பதால் கோவிலுக்கு பக்தர்கள் வருகை குறைவாகவே இருந்தது.

இந்த நிலையில் ஐப்பசி மாதம் தொடங்கிய நிலையில் ஞாயிற்றுக்கிழமை என்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். காதணி விழா உள்ளிட்ட விஷேசங்கள் நடைபெற்றதால் கோவில் பகுதி களைகட்டியது. மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர். கோவில் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்து தரவேண்டும் என பக்தர்கள் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். எனவே குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை விரைந்து நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags

Next Story