தர்மபுரி : முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு உற்சாக வரவேற்பு..!

முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்திக்கு தர்மபுரியில் உற்சாக வரவேற்பு
தர்புரி மாவட்டத்திற்கு வருகை வந்த "முத்தமிழ் தேர்" அலங்கார ஊர்திக்கு நல்லம்பள்ளி நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அருகில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி மலர்தூவி உற்சாக வரவேற்பு அளித்தார்.
கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கலைஞரின் பன்முக ஆற்றலையும், அவர் தமிழ் சமூகத்திற்கு படைத்தளித்த மக்கள் நலத் திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்லும் வகையில் பேனா வடிவில் வடிவமைக்கப்பட்ட "முத்தமிழ்த்தேர்" அலங்கார ஊர்தி கடந்த 04.11.2023ல் கன்னியாகுமரி மாவட்டத்தில் பயணத்தைத் தொடங்கியது. பல்வேறு மாவட்டங்கள் வழியாக பயணித்துவரும் இந்த முத்தமிழ்த் தேர் அலங்கார ஊர்தி, தருமபுரி மாவட்டம் வந்தடைந்தது. நல்லம்பள்ளி நெடுஞ்சாலைத்துறை மேம்பாலம் அருகில் நிறுத்தப்பட்ட முத்தமிழ்த் தேருக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி மலர்த்தூவி, மேளதாளத்துடன் வரவேற்றார்.
இதனை தொடர்ந்து, அலங்கார ஊர்தியில் அமைக்கப்பட்டிருந்த முத்தமிழ் அறிஞர் கலைஞரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர், முத்தமிழ்த்தேர் அலங்கார ஊர்தியை பார்வையிட வந்திருந்த கல்லூரி மாணவ-மாணவியர் மற்றும் பொதுமக்களுக்கு பேனா, இனிப்பு மற்றும் மரக்கன்றுகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடர்ந்து, செய்தி மக்கள் தொடர்பு துறையின் அதிநவீன மின்னனு வீடியோ வாகனத்தின் மூலம் "எழுத்தாளர் கலைஞர்" எனும் சிறப்பு குறும்படம் ஒளிப்பரப்பப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பென்னாகரம் எம்.எல்.ஏ ஜி.கே.மணி, தருமபுரி எம்.எல்.ஏ எஸ்.பி.வெங்கடேஸ்வரன், தருமபுரி நகர்மன்ற தலைவர் மா.லட்சுமி உள்ளிட்ட அரசியல் கட்சிப் பிரதிநிதிகள் மற்றும் அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
