கழிவுநீர் அடைப்பை நீக்க கோரி தர்ணா
காஞ்சிபுரத்தில் கழிவுநீர் அடைப்பை நீக்க கோரி அதிமுக கவுன்சிலர் மாநகர நிர்வாகத்தை கண்டித்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
காஞ்சிபுரம் பி.எஸ்.கே., தெருவில், கழிவுநீர் அகற்றும் நிலையம் இயங்கி வருகிறது. காஞ்சிபுரம் மாநகராட்சியின், 23வது வார்டு அ.தி.மு.க., கவுன்சிலராக புனிதா பதவி வகித்து வருகிறார். தன் வார்டில், நேதாஜி தெரு, பொய்யாகுளம் என, பல்வேறு தெருக்களில், புதை வடிகால்வாய் அடைப்பு எற்பட்டுள்ளன. இதை சரி செய்ய கூறி, காஞ்சிபுரம் மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதை கண்டித்து, கணவர் சம்பத்துடன் நேற்று, மாலை, 6:00 மணி அளவில் கழிவுநீர் உறிஞ்சும் வாகனங்களை வளாகத்தில் மடக்கி பிடித்து, தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த, காஞ்சிபுரம் மாநகராட்சி ஊழியர்கள் இருவரிடம் சமாதான பேச்சில் ஈடுபட்டனர். கழிவுநீர் அகற்ற உரிய நடவடிக்கை எடுக்கபடும் என, உறுதியளித்த பின், தர்ணா போராட்டத்தை கை விட்டனர்.