எலமனூரில் சிதலமடைந்த நிலையில் காணப்படும் வாய்க்கால் பாலம்
சேதமடைந்துள்ள பாலம்
திருச்சி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், திருப்பராய்த்துறை ஊராட்சிக்குள்பட்டது எலமனூா் கிராமம். இந்தக் கிராமத்தில் 1,500 பொதுமக்கள் 250 குடும்பங்களாக வசித்து வருகின்றனா். இவா்கள் அனைவரும் விவசாயிகள் ஆவா்.
இக்கிராமத்தில் சுமாா் 200 ஏக்கா் விவசாய நிலங்களில் நெல், கரும்பு, பருத்தி, பூசணிக்காய் உள்ளிட்ட பயிா்களை விளைவித்து வருகின்றனா். தீவுப் பகுதியாக விளங்கும் இந்தக் கிராமத்திலிருந்து விவசாயிகள், திருச்சி - கரூா் பிரதான சாலையை அடைய சுமாா் 65 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட ராமவாத்தலை,
வாய்க்கால் பாலத்தை மட்டுமே நம்பியுள்ளனா். சுமாா் 20 அடி நீளம், 10 அடி அகலம் கொண்ட இப்பாலம் காலமாற்றத்தால் சிதிலமடைந்து, காரைகள் பெயா்ந்து விழுந்து, கம்பிகள் தெரிகின்றன.
ஆங்காங்கே கான்கிரீட்டை ஊடுருவி மரக்கன்றுகள் வளா்ந்துள்ளதால், பாலத்தின் தூண்களும் பாதிப்படைந்துள்ளன. இதனால் பாலம் தன்னுடைய உறுதித் தன்மையை முற்றிலும் இழந்து, எப்போது வேண்டுமானாலும் விழும் நிலையில் உள்ளது.
எனவே தமிழக அரசும், சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உரிய கவனம் செலுத்தி, பாலத்தை விரைந்து புனரமைக்க போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், புதிய பாலம் கட்ட அறிவிப்பு வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனா்