திங்கள்நகர் பேரூராட்சி தலைவர், கவுன்சிலர்கள் உண்ணாவிரதம் .
குமரி மாவட்டம் திங்கள்நகர் பேருராட்சியின் 1-வது வார்டு ரேசன் கடையை சொந்த கட்டிடத்தில் அமைக்க தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழக அனுமதியுடன் கட்டிடம் கட்ட கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் எம்.பியிடம் 25 லட்சம் நிதி உதவியும் பெறப்பட்டது. இந்த நிலையில் ரேஷன் கடை அமைக்க செயல் அலுவலர் தடையாக இருப்பதாக கூறி பேரூராட்சி தலைவர் சுமன், கவுன்சிலர்கள் கவிதா, ஜேக்கப் ஆகியோர் பேரூராட்சி அலுவலகம் முன்பு இன்று காலை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் திமுக பிரமுகர்கள் உட்பட பலர் ஆதரவு தெரிவித்தனர். தகவல் அறிந்து இரணியல் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார், திங்கள்நகர் விஏஓ எழில் ஆக்னஸ் ஆகியோர் போராட்டக்காரர்கள் மற்றும் செயல் அலுவலர் ஆகியோருடன் தனித்தனியாக பேச்சுவார்த்தை நடத்தினார்.
பின்னர் சம்மந்தபட்ட இடம் சம்பந்தமாக நீதிமன்றத்தில் சமீபத்தில் தனியார் ஒருவர் வழக்கு தொடுத்து இருப்பதாக தெரிய வந்தது. வழக்கு இருப்பதை அப்போது தெரிந்து கொண்ட போராட்டக்கார்கள் அதை ஏற்றுக்கொண்டு, உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டனர்.