கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சி: தேர்வுகளை எழுத அறிவுறுத்தல்
கோப்பு படம்
கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சியில் பழைய பாடத்திட்டம் முடிவுக்கு வருகிறது என்றும், இத்திட்டத்தில் தேர்ச்சிபெறாதவர்கள் ஓராண்டுக்குள் துணைத்தேர்வுகளை எழுத வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தூத்துக்குடி கூட்டுறவு மேலாண்மை நிலைய முதல்வர் (பொறுப்பு) மணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது,
தமிழ்நாடு கூட்டுறவு ஒன்றியத்தின் அங்கமாக செயல்பட்டு வரும் கூட்டுறவு மேலாண்மை நிலையங்களில் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை 7 பாடத்திட்டங்கள் கொண்ட முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டய பயிற்சி மற்றும் தபால் வழி கூட்டுறவு மேலாண்மை பட்டய பிற்சி நடத்தப்பட்டு வந்தது.
2022-ம் ஆண்டு முதல் அனைத்து கூட்டுறவு மேலாண்மை நிலையங்களிலும் புதிய பாடத்திட்டத்தின் படி 10 பாடங்கள் இரண்டு பருவமுறைகளாக பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. 2022-ம் ஆண்டு முதல் புதிய பாடத்திட்டத்தின்படி பயிற்சிகள் நடத்தப்பட்டு இரண்டு பருவமுறைகளுக்கு தனித்தனியாக இறுதி தேர்வுகள் நடத்தப்பட்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டு வருகிறது. இறுதி தேர்வுகளில் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.
பழைய பாடத்திட்டங்கள் தொடங்கப்பட்டு 20 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளதாலும், தற்போது புதிய பாடத்திட்டம் தொடங்கி 2 ஆண்டுகள் முடிவடைந்து உள்ளதாலும் பழைய பாடத்திட்டங்களுக்கு முடிவு கட்டப்பட உள்ளன. எனவே பழைய பாடத்திட்டத்தின் படி 7 பாடங்கள் தேர்ச்சி பெறாத பயிற்சியாளர்களுக்கு துணைத்தேர்வுகள் வருகிற ஒரு ஆண்டுக்குள், அதாவது டிசம்பர் 2025-க்குள் துணைத் தேர்வுகள் நடத்தப்பட உள்ளது.
அவ்வாறு ஒரு ஆண்டுக்குள் நடைபெறும் துணைத்தேர்வில் கலந்து கொள்ளாத பயிற்சியாளர்கள் வரும் காலங்களில் புதிய பாடத்திட்டத்தின்படி முழுநேர கூட்டுறவு மேலாண்மை பட்டயபயிற்சியில் சேர்ந்து பயிற்சி பெற்றால் மட்டுமே பட்டய சான்றிதழ் வழங்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்