மாற்றுத்திறனாளிகள் தினவிழா - நலத்திட்ட உதவிகள் வழங்கல்
நல உதவிகள் வழங்கல்
சிவகங்கை நகராட்சிக்குட்பட்ட தனியார் மண்டபத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் இன்று நடைபெற்ற அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தின விழாவில், மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன், மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு வகையான உதவி உபகரணங்களை, சட்டமன்ற உறுப்பினர்கள் செந்தில்நாதன் (சிவகங்கை), மாங்குடி (காரைக்குடி) ஆகியோர் முன்னிலையில் வழங்கினார்.
பின்னர் அவர் பேசுகையில் தமிழக முதல்வர், மாற்றுத்திறனாளிகளின் நலனை கருத்தில் கொண்டு, அவர்களுக்கான எண்ணற்ற திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறார்கள். மேலும், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையை தன்வசம் வைத்து மாற்றுத்திறன் கொண்டவர்களின் மறுவாழ்விற்கென திட்டங்களை வழங்கி வருகிறார்கள்.
அதுமட்டுமன்றி, மாற்றுத்திறனாளிகள் உயர்கல்வி வரை படிப்பதற்கும், சுயதொழில் தொடங்குவதற்கு தேவையான தொழிற் பயிற்சி, வங்கிக்கடனுதவி வழங்கப்பட்டு வருவதுடன், கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவச் சிகிச்சைத் திட்டம், பராமரிப்பு நிதியுதவித் திட்டம், மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர ஓய்வூதியத் திட்டம் போன்ற எண்ணற்றத் திட்டங்களால் மாற்றுத்திறனாளிகளை பயன்பெறச் செய்யும் வகையில் தமிழகத்தில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஒவ்வொரு ஆண்டும் மாற்றுத்திறனாளிகளுக்கான பல்வேறு திட்டங்களை வழங்கி, அவர்களை பாராட்டும் வண்ணம் கடந்த 1993-ஆம் ஆண்டு முதல் அனைத்து நாடுகள் மாற்றுத்திறனாளிகள் தினம் டிசம்பர் 3-ஆம் நாள் உலகளவில் கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி, இந்தாண்டும் மாற்றுத்திறனாளிகளை மகிழ்விக்கும் வண்ணம் சிவகங்கை மாவட்டத்தில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
சிவகங்கை மாவட்டத்தில், பள்ளி செல்லும் மாற்றுத்திறனாளி குழந்தைகளின் நலனிற்காக அவர்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை, UDID அட்டை, முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை, உதவி உபகரணங்கள், மருத்துவ உதவிகள், கல்வி உதவித்தொகை, மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை மற்றும் வருவாய்துறையின் மூலமாக உதவித்தொகை போன்ற உதவிகள் வழங்கிட ஏதுவாக 12 ஊராட்சி ஒன்றியங்களிலும் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு 980 மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
மேலும், சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலமாக மாதந்திர பராமரிப்பு உதவித்தொகை மாதம் ரூ.2000/- வழங்கும் திட்டத்தின் கீழ் மனவளர்ச்சி குறைபாடுடையோர், 75% மற்றும் அதற்கு மேல் கை, கால் கடுமையாக பாதிக்கப்பட்டோர், தசை சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோர், தொழுநோயால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டோர் என 5 திட்டங்களின் கீழ் 3,997 பயனாளிகளுக்கு கடந்த இரண்டரை ஆண்டுகளில் ரூ.19,18,56,000/- வழங்கப்பட்டுள்ளது. மேலும் உதவி உபகரணங்கள் வழங்கும் திட்டங்களான இணைப்புச்சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், பேட்டரியால் இயங்கும் நவீன சிறப்பு சக்கர நாற்காலி, மடக்கு சக்கர நாற்காலி, தக்க செயலிகள் பொருத்தப்பட்ட திறன்பேசி, காதொலிக்கருவி, மூன்று சக்கர சைக்கிள், மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம் மற்றும் முதலமைச்சர் அவர்களின் விரிவான மருத்துவக்காப்பீட்டு திட்டத்தின் கீழ் நவீன செயற்கை கால் என 949 பயனாளிகளுக்கு ரூ. 3 கோடி மதிப்பில் உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் கடந்த இரண்டரை ஆண்டுகளில் பராமரிப்பு உதவித்தொகை வழங்கும் திட்டம், சுயவேலைவாய்பு அரசு மானியம் வழங்கும் திட்டம், திருமண நிதி உதவித்திட்டம், கல்வி உதவித்தொகை திட்டம், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நலவாரிய திட்டங்கள் மற்றும் உதவி உபகரணங்கள் வழங்குதல் ஆகிய திட்டங்களின் கீழ் 5,942 பயனாளிகளுக்கு ரூ. 22,84,24,000/- மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் வழிகாட்டுதலுடன் தமிழ்நாடு முழுவதும் மாற்றுத்திறனாளிகள் நலனிற்காக “உரிமைகள்” என்ற சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. இத்திட்டத்தின் மூலமாக கடைக்கோடியில் உள்ள மாற்றுத்திறனாளிகளும் பயன்பெறும் வகையில் வருவாய் கோட்டங்கள், வட்டாரங்களில் ஒருங்கிணைந்த சேவை மையங்கள் தொடங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளும் வழங்கிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளது. மேலும்,சிவகங்கை மாவட்டத்தில் முதல் கட்டமாக உரிமைகள் திட்டத்தின் கீழ் மாற்றுத் திறனாளிகள் தரவு பதிவு கணக்கெடுப்பு தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் மற்றும் தமிழ்நாடு நகர்புற வாழ்வாதார இயக்கம களப்பணியாளர்கள் மூலமாக உரிமைகள் திட்ட கணக்கெடுப்புக்காக உருவாக்கப்பட்டுள்ள செயலி மூலமாக மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு நேரில் சென்று கணக்கெடுப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் கணக்கெடுப்பில் முழுமையாக பங்கேற்க வேண்டும். சிவகங்கை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றம் அடையும் வகையில் அனைத்து அரசு துறைகளும் ஒருங்கிணைந்து மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான உதவிகள் கிடைத்திட மாவட்ட நிர்வாகத்தின் மூலமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என மாவட்ட வருவாய் அலுவலர் மோகனச்சந்திரன் தெரிவித்தார்.
அதனை தொடர்ந்து 5 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.35,000/- மதிப்பீட்டிலான மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்களும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.32,000/- மதிப்பீட்டிலான மடக்கு சக்கர நாற்காலிகளும், 4 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.40,000/- மதிப்பீட்டிலான மூன்று சக்கர நாற்காலிகளும், மேலும், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் நல வாரியத்தின் மூலம் 42 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.7,14,000/- மதிப்பீட்டில் இயற்கை மரண நிதி உதவிகளும், 1 மாற்றுத்திறனாளிக்கு ரூ.50,000/- மதிப்பீட்டிலான விபத்து மரண நிதி உதவியும். 34 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.78,500/- மதிப்பீட்டிலான குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையும் என மொத்தம் 90 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.9,49,500/- மதிப்பீட்டிலான மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை மாவட்ட வருவாய் அலுவலர் வழங்கினார்.