இரணியூரில் மீன்பிடி திருவிழாவில் ஏமாற்றம்
மீன் பிடிக்கும் மக்கள்
சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி அருகே இரணியூரில் உள்ள இரணி கண்மாயில் விவசாய பணிகள் நிறைவடைந்த நிலையில் தண்ணீர் வற்றத் தொடங்கியது. இந்நிலையில் ஊர் பெரியவர்கள் ஒன்று கூடி மீன் பிடி திருவிழா நடத்த முடிவு செய்து ஊரின் வளர்ச்சி நிதிக்காக ஊத்தா குத்தி மீன்பிடிக்க ரூ 200 வசூல் செய்வது என முடிவு செய்து சமூக வலைதளங்களில் அறிவிப்பு செய்தனர். காலை முதலே ஊத்தாவுடன் 500க்கும் மேற்பட்டோர் கண்மாய் அருகே ஒன்று கூடினர்.
ஒவ்வொரு ஊத்தாவிற்கும் ரூ 200 வசூல் செய்தவுடன் மீன்பிடிக்க அனுமதி கொடுத்தனர். உடனே கண்மாய்க்குள் இறங்கி ஊத்தா குத்தி மீன்களை பிடிக்க துவங்கினர். ஆனால் கண்மாய்க்குள் போதிய மீன்கள் இல்லாததால் ஏமாற்றம் அடைந்தனர். இதனால் ஏமாற்றம் அடைந்தவர்கள் கட்டிய பணத்தை கேட்டு ஊர் முக்கியஸ்தர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இரணியூர், கீழச்சீவல்பட்டி சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவல் அறிந்து விரைந்து வந்த போலீசார் பேச்சுவார்த்தை நடத்தியதால் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் ரூ 100 திரும்ப கொடுக்க ஊர் பெரியவர்கள் சம்மதம் தெரிவித்ததால் சாலை மறியலை கைவிட்டனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.