தமிழ் பல்கலைக்கழகத்தில் 33 இன வகை பறவைகள் கண்டுபிடிப்பு   

தமிழ் பல்கலைக்கழகத்தில் 33 இன வகை பறவைகள் கண்டுபிடிப்பு   
பறவைகள் கணக்கெடுப்பு
தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகம் வளாகத்தில் நடந்த பறவைகள் கணக்கெடுப்பில் 33 இன வகை பறவைகள் கண்டறியப்பட்டது.

தஞ்சாவூர், தமிழ் பல்கலைக்கழகம் வளாகம் சுமார் ஆயிரம் ஏக்கர் பரபரப்பளவு கொண்டது. இங்கு நூற்றுக்கணக்கான பறவைகள் இனம் இருப்பதாக பல்கலைக்கழகம் சார்பில் ஏற்கனவே பல்வேறு ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், தமிழ்நாடு வனத்துறை வனவர் இளஞ்செழியன், வனக்காவலர் பூபதி, அருங்காணுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஸ்குமார் குழுவினர், விதையால் ஆயுதம் செய் அமைப்பை சேர்ந்த நடராஜன், அமர்நாத், பொய்யாமொழி, சுற்றுச்சூழல் அமைப்புகள், பறவையியல் வல்லுனர்கள், மாணவர்கள் என ஐம்பதுக்கும் மேற்பட்டவர் காலை 7 மணிக்கு துவங்கி 9:30 மணி வரை வளாகம் முழுவதும் பறவைகள் கணக்கெடுப்பில் ஈடுபட்டனர்.

குழுவிற்கு 10 பேர் வீதம் 5 குழுக்களாக பிரிக்கப்பட்டு தனித்தனியாக பல்கலைக்கழக வளாகத்தில், நடைபயணம் மேற்கொண்டு பறவைகள் குறித்து ஆய்வு செய்தனர். இதில், 33 இன வகைளில், 527 எண்ணிக்கையிலான பறவைகள் இருப்பதாகவும், ஒரு சில நீர்ப்பறவைகள், தரைவாழ் பறவைகள் அதிகம் இருப்பதாகவும் கண்டறிந்துள்ளனர். அத்துடன் பறவைகள் கணக்கெடுப்பு தொடர்பாக குத்தவை நாச்சியார் கல்லூரி பேராசிரியர் சுகுமார், ஓய்வு பெற்ற வனத்துறை அதிகாரி செல்வம் உள்ளிட்டோர் மாணவர்களுக்கு பயிற்சி அளித்தனர்.

முன்னதாக பயிற்சி வகுப்பை தமிழ்ப் பல்கலைக்கழக மக்கள் தொடர்பு அலுவலர் முருகன், தோட்டப் பிரிவு அலுவலர் சுவாமிநாதன் கலந்து கொண்டு தொடங்கி வைத்தார்கள். இது குறித்து அருங்காணுயிர் காப்பு மற்றும் சுற்றுச்சூழல் அறக்கட்டளை ஒருங்கிணைப்பாளர் சதீஷ் குமார் கூறியதாவது; தமிழ்ப்பல்கலைக் கழகத்தில் பல்வேறு வகையான மரங்கள் இருப்பதால், பறவைகள் வாழ்வதற்கு ஏற்ற இடமாக உள்ளது. இது குறித்து மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக பல்கலைக்கழக துணைவேந்தர் ஒத்துழைப்புடன் கணக்கெடுப்பு செய்தோம். வளாகத்தில் நீலமுக செண்பகம், சுடலை குயில், தேன் பருந்து, ஆசிய பச்சை தேன் உண்ணி என ஏராளமான பறவைகள் உள்ளன. பல்கலைக்கழகத்தில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதத்தில் அதிகளவில் பறவைகள் வருகின்றன. இங்குள்ள பறவைகள் இனம் அழியாமல் பாதுகாக்க பல்கலைக்கழகம் சார்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார்.

Tags

Next Story