திண்டுக்கல் அருகே மரத்தால் செய்யப்பட்ட நினைவுத் தூண் கண்டுபிடிப்பு

தஞ்சை தமிழ் பல்கலைக்கழக கடல் சார் வரலாறு மற்றும் கடல் சார் தொல்லியல் துறை மாணவர்கள் மரத்தால் செய்யப்பட்ட நினைவுத்தூணை கண்டுபிடித்துள்ளனர்.

திண்டுக்கல் அருகே மரத்தால் செய்யப்பட்ட நினைவுத் தூணைத் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையினர் கண்டறிந்தனர். தமிழ்ப் பல்கலைக்கழகக் கடல்சார் வரலாறு மற்றும் கடல்சார் தொல்லியல் துறையில் முதுகலைத் தொல்லியல் மாணவர்கள் திண்டுக்கல் மாவட்டம், கசவனம்பட்டி அருகே உள்ள கோனூரில் மார்ச் 14 ஆம் தேதி கள ஆய்வு செய்தனர். அப்போது, துறை மாணவி மௌனிகாஸ்ரீ அடையாளப்படுத்திய நடுகற்களையும், அங்கிருந்த அரிய மரத்தால் செய்யப்பட்ட நினைவுத் தூணையும் துறையின் தலைவர் வீ. செல்வகுமார், கௌரவ உதவிப்பேராசிரியர் செ. கௌரிசங்கர் ஆய்வு செய்தனர்.

இது குறித்து தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி. திருவள்ளுவன் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருப்பது: ஏறத்தாழ 300 ஆண்டுகள் பழைமையான இந்த மர நினைவுத்தூண் ஒரு வீரனின் நினைவாக உருவாக்கப்பட்டிருக்கலாம். இது தொடர்பான தெளிவான தகவல் தெரியவில்லை என உள்ளூர் மக்கள் கூறுகின்றனர். சதுர வடிவில் 182 செ.மீ. உயரமும், 17.5 செ.மீ. அகலமும் உள்ள இத்தூண் நான்கு பக்கங்களிலும் 7 சதுர வடிவக் கட்டகங்களில் பல சிற்பங்களைக் கொண்டுள்ளது. ஆண், பெண் உருவங்கள், பசு, கிருஷ்ணர், வேணுகோபாலன், நின்ற வீரர்கள், பெண்கள் சிற்பம், பெண் தயிர் கடையும் காட்சி, குதிரை மீது வீரன், மேலே சந்திரன், சூரியன் ஆகிய சிற்பங்கள் அழகாகச் செதுக்கப்பட்டுள்ளன. தெய்வம் என்பதை உணர்த்த மூலையில் முக்கோண வடிவ வேலைப்பாடு உள்ளது. தூணின் மேற்பகுதி கோயில் சிகரம், இதழ்கள், கலசத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மேய்ச்சல் சமூக வாழ்வைப் பிரதிபலிக்கிறது. தலைக் கொண்டை அமைப்பு பக்கவாட்டை நோக்கி நாயக்கர் காலத்தை ஒத்ததாகக் காணப்படுகிறது. இதை இவ்வூர் மக்கள் பொம்மம்மாள் தெய்வம் என வழிபடுகின்றனர். இத்தூண் அமைந்துள்ள கோயில் அமைப்பு மரம், புற்களால் வேயப்பட்டு பழைமை மாறாமல் இருப்பது இதன் சிறப்பு.

கோனூரில் பழங்கால ஊர் இருந்ததற்கான தொல்லியல் சான்றுகளும் கிடைக்கின்றன. கோனூர் என்ற ஊரின் பெயரும் மேய்ச்சல் சமூகத்தை நினைவூட்டுகிறது. இவ்வூரில் மாலைக்கோயில் எனப்படும் செட்டியார் கோயிலில் நினைவுத் தெய்வ உருவங்களும், தாதப்பன் என்று ஒரு நடுகல்லும் காணப்படுகின்றன. இவ்வூரில் உள்ளது போன்ற மரத்தாலான நினைவுத்தூண்கள் அரிதானவை என திருவள்ளுவன் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story