பழங்கால கிணற்றின் சுற்றுச்சுவர் கண்டுபிடிப்பு
கும்பகோணம் வட்டம், பட்டீஸ்வரம், முந்தாலம்மன் கோயில் தெருவில் உள்ள மங்களநாயகி சமேத ராமலிங்கசுவாமி கோயில் சுமார் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட கோயிலாகும். ராஜராஜ கோழனின் சிற்றன்னையான பஞ்சவன்மாதேவி மறைந்த பிறகு ராஜராஜசோழனின் மகனான ராஜேந்திர சோழன் தனது சிற்றன்னையின் நினைவாக அமைக்கப்பட்டது தான் இந்த மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோயிலாகும். சிறப்புப் பெற்ற இந்தக் கோயிலில், காலை பட்டீஸ்வரம் அண்ணா அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த தொன்மை பாதுகாப்பு மன்றம், சாரணர் இயக்கம் மற்றும் தேசிய பசுமைப்படை இயக்கத்தைச் சேர்ந்த 54 மாணவர்கள் மற்றும் தலைமையாசிரியை கி.ஹேமலதா, ஆசிரியர்கள் ச.முத்துக்குமாரசாமி, என்.வினோத்குமார், பி.சிவராமகிருஷ்ணன் ஆகியோர், தொன்மையான இந்தக் கோயிலைப் பற்றி தெரிந்து கொள்ளச் சென்றனர். தொடர்ந்து, அந்தக் கோயிலைத் தூய்மைப்படுத்தும் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது, இந்தக் கோயிலின் வலது புறத்தில் சுமார் 5 மீட்டர் சுற்றளவு கொண்ட பழங்காலத்து கற்களைக் கொண்டு கட்டப்பட்ட கிணற்றின் மேற்புற சுற்று சுவர் கண்டுபிடிக்கப்பட்டது. பின்னர், அவர்கள், 1 அடி ஆழத்திற்கு தோண்டிப்பார்த்த போது, கிணறு இருப்பதற்கான தடம் தெரிய வந்தது. இதனையறிந்த அவர்கள் அனைவரும் ஆச்சிரியமடைந்து, இந்த கோயிலின் நிர்வாகத்தில் உள்ள பட்டீஸ்வரம் கோயில் புலவர் சி.செல்வசேகரன் மற்றும் பணியாளர்களுக்கு தகவல் அளித்தனர். அதன் பேரில், அவர்கள் அங்கு வந்து பார்த்து விட்டு, மேலதிகாரிகளுக்கு தகவலளித்து, இந்த கிணற்றை விரைவில் தோண்டி எடுக்கப்படும் என அவர்கள் தெரிவித்தனர். இதனையறிந்த அந்தப் பகுதியில் உள்ளவர்கள், ஆர்வமுடன் பார்த்துச் செல்கின்றனர்.