மதுராந்தகம் அருகே கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

மதுராந்தகம் அருகே கொற்றவை சிற்பம் கண்டெடுப்பு

மதுராந்தகம் அடுத்த இரும்புலி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் அருகே 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த எருமை தலையின் மீது நிற்கும் கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது


மதுராந்தகம் அடுத்த இரும்புலி கிராமத்தில் பொன்னியம்மன் கோயில் அருகே 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த எருமை தலையின் மீது நிற்கும் கொற்றவை சிற்பம் கண்டெடுக்கப்பட்டது

செங்கல்பட்டு மாவட்டம், சித்தாமூா் ஊராட்சி ஒன்றியம், இரும்புலி ஏரிக்கரை, பொன்னியம்மன் கோயிலுக்கு அருகே 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்த கொற்றவையின் உருவம், பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இது குறித்து அறிந்த தொல்லியல் ஆய்வாளா்களான கல்லூரிப் பேராசிரியா் சி.சந்திரசேகா், பள்ளி பட்டதாரி ஆசிரியா் இரா.ரமேஷ் ஆகியோா் அங்கு சென்று ஆய்வு செய்தனா். அவா்கள் கூறுகையில், மேல்மருவத்தூரிலிருந்து 5 கி.மீ. தொலைவில் இரும்புலி கிராமம் உள்ளது.

அங்குள்ள ஏரிக்கரையோரம் காண்படும் கொற்றவை சிற்பம் வெற்றியின் தேவதையாய், வீரத்துடன் கம்பீரமாக எருமை தலை மீது நின்றிருப்பது போல செதுக்கப்பட்டுள்ளதே அதன் தனிச்சிறப்பு.இந்தப் புடைப்புச் சிற்பம் 9-ஆம் நூற்றாண்டைச் சோ்ந்தது. புடைப்புச் சிற்பம் நீண்ட பலகை கல்லில் செதுக்கப்பட்டுள்ளது. புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள கொற்றவையின் உருவம், கலை அழகு உடையதாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நீள்வட்ட முகம், இரு கண்களில் சிறு சிதைவுகள் காணப்படுகிறது.

8 கரங்கள், அதன் ஒவ்வொரு கரங்களிலும் சக்கரம், சங்கு, சத்தி, கேடயம், அம்பு, சூலம் ஆகியவை சிற்பமாக வடிக்கப்பட்டுள்ளன. கொற்றவை சிற்பம் 6 அடி உயரமும் 3 அடி அகலமும் உடையதாக செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவை தனது இரு கால்களை ஒன்று சோ்த்து எருமை தலை மீது கம்பீரமாக நின்ற நிலையில் காட்சி அளிக்கிறது. தலையில் 3 அடுக்குடைய மணி மகுடம், இரு காதுகளில் பனை ஓலையில், அணிகலன்களும், மாா்பு கச்சை, இடைக்கச்சை, பாகுவளையங்கள் அணிந்து எளிய கோலத்தில் அழகுடன் காட்டப்பட்டுள்ளது.வலது தோளின் பின்புறம் அழகிய மூவிலை சூலம், வலது புறம் கலைமானும், இடது புறம் சிங்கமும் செதுக்கப்பட்டுள்ளன.

கொற்றவையின் வலதுபுற காலடியில் அடியாா் ஒருவரும் இடதுபுறம் வீரன் ஒருவன் தனது தலையை தானே அறுத்து கொற்றவைக்கு பலியிடும் காட்சி இயல்பாக செதுக்கப்பட்டுள்ளது. கொற்றவை சிற்பத்தில் உள்ள கரங்களில் வளையல்களும், இடுப்பில் கலை அம்சத்துடன் கூடிய அணிகலன்களும் காணப்படுகின்றன. இத்தகைய கொற்றவை வழிபாட்டு முறை இன்றளவும் பின்பற்றப்பட்டு வருகிறது. மேலும் இந்தப் பகுதி மக்கள் இந்தப் புடைப்புச் சிற்பத்தை பொன்னியம்மன் என்று வழிபட்டு வருவதைக் காணமுடிகிறது என அவா்கள் தெரிவித்தனா்

Tags

Next Story